புதிய உடன்படிக்கையின் இரத்தம் - பகுதி 2.

சகோதரி சாந்தி பொன்னு

நாடுகள், குழுக்களுக்கிடையில் ஏற்படுத்தப்படுகின்ற ஏராளமான ஒப்பந்தங்களில் எத்தனை முறிந்துபோகின்றன, எத்தனை நிறைவேற்றப்படுகின்றன? உடன்படிக்கை, ஒப்பந்தம்; இவ்விரண்டிலும் இரு நபர்கள் அல்லது இரு குழுக்கள் சம்பந்தப்படுவதில் ஒருமைப்பாடு தென்பட்டாலும், முக்கிய வேறுபாடும் உண்டு.
ஒப்பந்தத்தில் சம்பந்தப்படுகின்றவர்கள் தத்தமது நலனையே முக்கியமாகக்கொண்டு கோரிக்கைகளை முன்வைப்பர். ஆனால், உடன்படிக்கையோ இதற்கு மாறானது. இங்கே, சம்பந்தப்படுகின்ற நபரோ, குழுக்களோ, அடுத்தவரின் நலனைக் கருதியே உடன்படிக்கைக்கு உட்படுவர் இரண்டிற்குமே அறிமுகம் தேவை என்றாலும், உடன்படிக்கையிலே உறவுத்தன்மை மிக முக்கிய பங்கெடுக்கிறது. அதற்காக, ஒரு உறவை ஏற்படுத்துவதற்கு உடன்படிக்கை அவசியமில்லை. இரு நண்பர்கள் எந்தவொரு ஒப்பந்தமோ உடன்படிக்கையோ இன்றி காலம் முழுவதும் நண்பர்களாகவே இருக்கலாமே.

ஆனாலும் சமுதாய ஒழுக்கநெறிக்காக சில உறவுகள் உடன்படிக்கையின் அடிப்படையிலேதான் ஏற்படுத்தப்படுகின்றன. அதற்கு முக்கிய உதாரணம் திருமண உறவு, சம்பிரதாயமாகவும் சட்டப்பூர்வமாகவும் ஏற்படுத்தப்படுகின்ற இந்த உறவானது, சுயநலத்தை மாத்திரமே முக்கியப்படுத்தவும், தேவையானால் எழுதவும், பின்னர் கிழித்தெறியவும் வெறும் கடுதாசியில் எழுதுகின்ற ஒப்பந்தம் அல்ல. கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும் தங்களைத் தாங்களே மனப்பூர்வமாக அர்ப்பணிக்கின்றதும், சாட்சிகளோடும் அடையாளங்களோடும் உறுதிப்படுத்தப்படுகின்றதுமான ஒரு உடன்படிக்கையே இது. இங்கே சுய நலத்திற்கு இடமில்லை. கணவன் மனைவிக்கிடையிலான ஒளிவுமறைவற்ற இதய பூர்வமான பிணைப்பும், அதன் பிரதிபலிப்பாய் ஒரே மாம்சமாகுதலுக்கூடாக ஏற்படுகின்ற உறவும் அதனை உறுதிசெய்து முத்திரையிட்டு விடுகின்றது. இப்படிப்பட்ட காத்திரமான உடன்படிக்கை இன்று சர்வசாதாரணமாக கிழித்தெறியப்படுகிறது என்பது பயங்கரமான விஷயம். மனிதன் எதற்கும் துணிந்தவனாக, தனக்குத்தானே கடவுளாகிவிட்டான் என்பதற்கு இதற்கும் மேலாக என்ன நிரூபணம் வேண்டும்?

தொழில் ரீதியாக அல்லது வியாபார ரீதியாகவும் சிலர் உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம் செய்வதுண்டு. மேலும், உறவுகளுக்கிடையே சமாதானத்தினிமித்தம் உடன்படிக்கை செய்வதுமுண்டு. ஆபிரகாமும் அபிமெலேக்கும் உடன்படிக்கை செய்ததையும் (ஆதி. 21:27-32), யாக்கோபும் லாபானும் உடன்படிக்கை செய்ததையும் (ஆதி.31:43-55) வேதாகமத்தில் வாசிக்கிறோம். இவ்விரு சந்தர்ப்பத்திலும் கோரிக்கைகளும் சாட்சிக் குரிய அடையாளங்களும் காணப்பட்டன.


உடன்படிக்கை

எபிரேய மொழியில் உடன்படிக்கை என்ற பதமானது, ‘இருவருக்கிடையில்’ என்ற அர்த்தத்தைத் தருகிறது. இங்கே, உடன்படிக்கைக்கு உட்படுகின்ற இரு பகுதியினருக்குமிடையில் ஒரு உறவுத்தன்மை அழுத்திக் கூறப்படுகிறது. மனுஷ உடன்படிக்கைகள் பொதுவாக, ஒரே தகுதி தராதரமுடைய இரு பகுதியினருக்கிடையிலேதான் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால், தெய்வீக உடன்படிக்கை என்பது முழுவதும் வித்தியாசமானது. சர்வ சிருஷ்டிகரான தேவன், தம்மோடு உடன்படிக்கை செய்வதற்கு எந்தவித தகுதியுமற்ற மனிதனுடன் உடன்படிக்கையை ஏற்படுத்தச் சித்தம்கொண்டார் என்பது மெய் சிலிர்க்கவைக்கும் ஒரு உண்மை. பரிசுத்த வேதாகமத்தின் முழுமுதற் சத்தியமும் இதுதான். மாத்திரமல்ல, தேவனுடைய வார்த்தையானது பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டிருப்பதும் இந்த உடன்படிக்கையின் அடிப்படையிலேதான். மோசேயோடு செய்யப்பட்ட பழைய உடன்படிக்கையும், கிறிஸ்துவினால் உண்டான புதிய உடன்படிக்கையுமே பாரம்பரியமாக பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று அழைக்கப்பட்டு வருகிறது.


பழைய உடன்படிக்கை

தேவனோடு சரிசமமாக நிற்கத்தக்கவன் யார்? தகுதி தராதரத்திற்கு அப்பாற்பட்டு, தேவன் தாமே கிருபையாய் மனமுவந்து, தமக்கு முன் நிற்கத் தகுதியே இல்லாத மனிதனோடே உடன்படிக்கை செய்யுமளவுக்கு மனிதனை நேசித்தார். இது ஒரு தெய்வீக உடன்படிக்கை. இது தேவன் மனிதனுக்குக் கொடுத்த பெரிய கனம் என்று சொல்ல வேண்டும். இப்படியிருக்க நாம் இந்த உடன்படிக்கைக்கும், அதனிமித்தம் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தத்திற்கும் என்ன கனத்தைக் கொடுக்கிறோம்?


நோவாவுடனான உடன்படிக்கை

ஆபிரகாமின் காலத்துக்கு முன்னர் கர்த்தர் நோவாவுடனே செய்த உடன்படிக்கையில் (ஆதி.9:8-18) மூன்று முக்கிய விஷயங்கள் நமக்குப் புலனாகின்றன.

1. சகல தெய்வீக உடன்படிக்கைகளும் தேவனிடத்திலிருந்தே ஆரம்பமாகின்றன.

2. தேவன் ஏற்படுத்தும் சகல உடன்படிக்கைகளும் நித்தியமானவை. அவை நித்திய உடன்படிக்கைகள்.

3. எல்லா உடன்படிக்கைகளும் கண்களால் காணக்கூடியதான ஒரு அடையாளத்தால் உறுதிப்படுத்தப்படுகிறது.

இன்னொரு தடவை பாவியாகிய மனுக்குலத்தை தண்ணீரால் அழிப்பதில்லை என்பதற்காகவே தேவன் நோவாவுடன் இந்த உடன்படிக்கையை ஏற்படுத்தினார். இதற்கு வானவில் அடையாளமானது.


ஆபிரகாமுடனான உடன்படிக்கை

தேவன் ஆபிரகாமை அழைத்து, அவரது சந்ததியை ஆசீர்வதித்து, பூமியில் தம்முடைய ஜனமாக அவர்களை வைப்பதாக வாக்குப்பண்ணி, அவர் மூலமாக பூமியிலுள்ள சகல சந்ததிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் உடன்படிக்கையை ஏற்படுத்தினார். இங்கே ஆபிரகாம் நிறைவேற்றவேண்டிய பகுதி ஒன்று இருந்தது. அதாவது, பூமியிலுள்ள சகல வம்சங்களும் ஆசீர்வதிக்கப்படுவதற்கு ஏதுவான ஒரு பாலமாக தேவனுக்கு முன்பாக உண்மையும் உத்தமமுமாய் ஆபிரகாம் வாழ வேண்டும் (ஆதி.12:1-3). ஆபிரகாமுடன் உடன்படிக்கையை ஏற்படுத்திய தேவன், ஆபிரகாமின் சந்ததி எண்ணுவதற்கு கணக்கில்லாமல் பெருகும் என்றும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குத் தாம் அவர்களைக் கொண்டு சேர்ப்பதாகவும் உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார் (ஆதி.15:18). இந்த உடன்படிக்கைக்கு தேவன் கொடுத்த அடையாளம்தான் விருத்தசேதனம் (ஆதி.17:11).


தாவீதுடனான உடன்படிக்கை

இவ்விரண்டு உடன்படிக்கைகளையும் விட தேவன் தாவீதுடன் செய்த உடன்படிக்கையும் மிக முக்கியமானது (2சாமு.7:8-16). தாவீதின் சந்ததியை எழும்பப்பண்ணி, அந்தச் சந்ததியிலே ராஜ்யத்தை நிலைப்படுத்துவதாக கர்த்தர் தாவீதுக்கு வாக்குப்பண்ணினார். இந்த அதிகாரத்தின் பின்பகுதியில் தாவீது, தன்னையும் தன் வீட்டையும் கர்த்தருடைய கரத்திலே ஒப்புவிக்கிறதையும் நாம் காண்கிறோம். ஆனால், இங்கேயும், தாவீதின் கர்ப்பப்பிறப்பானவன் அக்கிரமம் செய்தால் தாம் தண்டிப்பதாக தேவன் உறுதியாகக் கூறியிருந்தார்.

இந்த மூன்று உடன்படிக்கைகளையும் உற்று நோக்கும்போது, இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு எல்லைக்குட்பட்டிருப்பதை கவனிக்கலாம். ஆனால், எல்லைக்குட்பட்ட இந்த மூன்றுமே, மோசேயுடன் ஏற்படுத்தப்பட்ட எல்லையற்ற உடன்படிக்கையைச் சுட்டிக்காட்டுகின்றன என்பதை நாம் முக்கியமாக கவனிக்கவேண்டும்.


மோசேயுடனான உடன்படிக்கை

தாம், தமக்கெனத் தெரிந்துகொண்ட ஜனமாகிய இஸ்ரவேலுடன் மோசேக்கூடாக தேவன் செய்துகொண்ட உடன்படிக்கையானது பழைய அல்லது முதலாவது உடன்படிக்கை என்று சொல்லப்படுகிறது. இது ஒரு எல்லைக்குட்பட்டது அல்ல; இது புதிய அல்லது இறுதி உடன்படிக்கையிலிருந்து வேறுபட்டிருந்தாலும், புதியதிற்கு இந்தப் பழையதே நிழலாட்டமாய் இருக்கிறது. புதியதின் நிறைவேறுதலை நோக்கியே பழையது மக்களை இட்டுச்சென்றது.

யாத்.19:3-25 வரை இந்தப் பழைய உடன்படிக்கையின் ஏற்பாட்டைக் காண்கிறோம். யாத்.20:1-17 வரையும் இதற்கான நிபந்தனைகளை வாசிக்கிறோம். யாத்.20:22-23:33 வரைக்கும் இதற்கான விரிவாக்கத்தைக் காண்கிறோம். யாத்.24:1-12 வரையில் இது உறுதிப்படுத்தப்பட்டதை வாசிக்கிறோம். விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு மத்தியஸ்தராயிருக்கிற கிறிஸ்து (எபி.3:6) வெளிப்படும்வரைக்கும், அவரால் ஏற்படுத்தப்பட்ட இரண்டாவதும், இறுதியுமான புதிய உடன்படிக்கையால் அந்தப் பழைய உடன்படிக்கை மாற்றீடு செய்யப்படும்வரைக்கும், தேவனுக்கும் அவரால் தெரிந்தெடுக்கப்பட்ட ஜனத்திற்கும் மீட்பினால் ஏற்படுத்தப்பட்ட உறவை எடுத்துக்காட்டும் விதத்தில் இந்தப் பழைய உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

மோசேயுடனான இந்த உடன்படிக்கையின் அடையாளம் ஓய்வுநாள் ஆசரிப்பு (யாத்.31: 13,16,17). இந்த உடன்படிக்கையை நிறைவேற்றுவோம் என்று இஸ்ரவேலர் உறுதி பூண்டனர். “அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் யாவையும் குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றான்” (யாத்.24:7,8). உடன்படிக்கை உறுதிப்படுத்தப்படும் பொழுது செலுத்தப்பட்ட பலியின் இரத்தம் சிந்தப்பட்டு, அந்த இரத்தம் பலிபீடத்தின் மேலும், ஜனங்கள்மேலும் தெளிக்கப்பட்டது.

ஆம், இரத்தம் சிந்துதலும், அடையாளமும் இல்லாமல் உடன்படிக்கை இல்லை. அப்படியானால் உடன்படிக்கை என்பது நமது சிந்தனைக்கும் மேலே எத்தனை முக்கியத்துவம் பெற்றது என்பதை உணரவேண்டும். இந்த முதலாம் உடன்படிக்கையும், அதற்காகச் சிந்தப்பட்ட இரத்தமும், முடிவுமட்டும் உள்ள அனைத்து மனுமக்களின் மீட்பிற்கு அடையாளமாகவும் முத்திரையாகவும் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தத்தினால் ஆன புதிய உடன்படிக்கைக்கு நிழலாட்டமாக இருக்கிறது.

ஆக, வேதாகம உடன்படிக்கை, அதாவது தேவன் மனிதனோடு ஏற்படுத்திய இந்த உடன்படிக்கையானது, ஒரு எல்லைக்குட்பட்டு, வேண்டியபோது மாற்றக்கூடிய வெறும் ஒப்பந்தத்திற்கு ஒப்பாக முடியாது. ஆக, தேவன் மனுக்குலத்துடன் செய்த உடன் படிக்கையைத் துச்சமாக எண்ணி, இன்றும் தேவனை அவமதிக்கின்ற நாம், இந்த உடன்படிக்கையை ஒரு ஒப்பந்தமாகவோ வெறும் ஏற்பாடாகவோ எண்ணினால் அது நமது மடமைத்தனமே. அது சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தத்தையும் அவமதிப்பதாகவே இருக்கும்.


இஸ்ரவேலரும் உடன்படிக்கையும்

‘கர்த்தர் சொன்னபடி செய்யக் கீழ்ப் படிவோம்’ என்று வீரவசனம் பேசிய இஸ்ரவேலர் சீக்கிரமே மீறிவிட்டனர் (யாத்.32:1-31). அடிக்கடி மீறுதலின் ஜனமாகவே இருந்தனர் (எரே.31:32). மக்கள் இப்படி மீறுவார்கள் என்று தேவன் அறியாதவரா என்ன? ஆனாலும், தேவன் அவர்களைக் கட்டுப்பாடோடு நடத்தினார். தாம் ஏற்படுத்தப்போகின்ற புதிய உடன்படிக்கையைக் குறித்து எரேமியா தீர்க்கர் மூலமாக அறிவித்த தேவன், அந்த நித்திய உடன்படிக்கையை நோக்கி ஜனங்களை முன்நடத்தினார். ‘நாட்கள் வரும், அப்பொழுது நான் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்’ என்றும், பிதாக்களோடே செய்த உடன்படிக்கையின்படியல்ல; ஏனெனில், அவர்கள் அந்த உடன்படிக்கையை மீறி அவமாக்கிப்போட்டார்கள் என்றும் கர்த்தர் சொன்னார். இஸ்ரவேல் உடன்படிக்கையை அவமாக்கிப்போட்டதால், மனுக்குலத்திற்குத் தம்மை வெளிப்படுத்தும்படி தமக்கெனத் தெரிந்துகொண்ட இந்த ஜனத்தை தேவன் அழித்துப்போடவில்லை. ‘அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்தில் வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்’ (எரேமி.31:33).


பழையதும் புதியதும்

புதிய ஏற்பாடானாது, நியாயப்பிரமாணத்தினாலான உடன்படிக்கையையும், வாக்குத்தத்தினாலான உடன்படிக்கையையும் நமக்குத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டுகிறது. முதலாவது உடன்படிக்கை சீனாய் மலையில் உருவானது (கலா.4:22-26). எழுத்தினாலுண்டான பழைய உடன்படிக்கை யானது மரணத்துக்கு ஏதுவானது என்றும் (2கொரி.3:6,7), பாவமாம்சத்தின் பெலவீனத்திற்குட்பட்ட மனுக்குலத்தால் இந்த உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிய முடியாது (ரோம.8:3) என்றும் பவுல் விளக்குகிறார். ஆனால், புதிய உடன்படிக்கையோ, ‘விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில்’ ஸ்தாபிக்கப்பட்டது (எபி.8:6). இதற்கு கிறிஸ்துவே மத்தியஸ்தர். மேலும், ‘முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும் பொருட்டு அவர் (கிறிஸ்து) மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்’ (எபி.9:15). இந்த புதிய உடன்படிக்கை வாக்குகள் அடங்கியது. பாவத்தினிமித்தம் உடன்படிக்கையின் பங்காளியான மனுஷன் – அதாவது நாம், நமது பங்களிப்பைச் சரிவர நிறைவேற்றத் தவறினாலுங்கூட, நமக்கு மீட்புத் தருவதாக தேவன் வாக்களிக்கிறார். இதுதான் கிருபையின் ஈவு. (எபேசி.2:1-9ஐ வாசிக்கவும்). பழையதில், பலிசெலுத்தும் ஆசாரியனும் தனக்காகப் பலி செலுத்த வேண்டும். இங்கே கிறிஸ்துவாகிய மகா பிரதான ஆசாரியரோ தாமே பலியானார். பழையதில் பலி செத்தது. புதியதில் செலுத்தப்பட்ட பலி, ஜீவனோடு உயிர்த்தெழுந்து இன்றும் ஜீவிக்கிறார்.

மனிதன் பாவத்தில் விழுந்தபோதே, அவனுடைய மீட்புக்குரிய வாக்கைத் தேவன் அளித்துவிட்டார் (ஆதி.3:15). ஆகவே, ஒரு சந்ததியைத் தெரிந்தெடுத்து, அந்த சந்ததியில் மேசியா வருவார் என்பதை தேவன் காலத்துக்குக் காலம் உறுதிப்படுத்தினார். அப்படியே கிறிஸ்து வந்தார். நோவாவுடனான உடன்படிக்கையில், மனுக்குலம் மீட்கப் படும்வரைக்கும் இயற்கையால் உண்டாகும் நியாயத்தீர்ப்பைத் தாம் நிறுத்திவைப்பதாக தேவன் விளங்கவைத்தார் (ஆதி.8:21,22; 1பேது.3:7,9,15). ஆபிரகாமுடனான உடன் படிக்கையில் ஆபிரகாமின் விசுவாசத்தினிமித்தம் அவருடைய சந்ததியை ஆசீர்வதிப்பதாகவும், பூமியிலுள்ள சந்ததிகளெல்லாம் ஆபிரகாமுக் கூடாக ஆசீர்வதிக்கப்படும் என்றும் கர்த்தர் உறுதிகொடுத்தார்.


உடன்படிக்கையில் கிறிஸ்து

பழைய உடன்படிக்கையானது, புதிதும், நிஜமும் இறுதியானதுமான உடன்படிக்கையின் நிழல் என்பது நமக்குத் தெளிவு (எரே.31:31, எபி.8:1). மிருகபலியை ஏற்றுக் கொண்டு மனிதனின் பாவத்தை மன்னிக்க அன்று தேவன் தயை பெருத்தவராயிருந்தார். தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உடன்படிக்கையானது, மிருக பலியுடன் ஆரம்பிக்கப்பட்டு, அதன் இரத்தத்தால் முத்திரையிடப்பட்டது (யாத்.24:8). ஆனால், இந்தப் பலியும், பலி இரத்தமும் பாவத்தை நிவிர்த்தியாக்காது. ஆகவே, தேவாட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவில் இது நிறைவேற்றப்பட்டது. இயேசுகிறிஸ்துவின் இரத்தமே சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிறது. அவரிடத்தில் விசுவாசம் வைக்கிற எவனும் இந்த மீட்பைப் பெற்றுக்கொள்கிறான். இனி ஒரு பலி செலுத்தப்படமாட்டாது. இனி வரப் போவது நியாயத்தீர்ப்பு ஒன்றுதான். ஆக, புதிய உடன்படிக்கையானது பழைய உடன்படிக்கையின் நிறைவேறுதலே தவிர, புதியது பழையதை அழித்துவிடவில்லை என்பதும் தெளிவு (எரே.31:31-34).

மோசேயுடனான உடன்படிக்கை தோற்றுப் போகவில்லை; அது தன் வேலையை முடித்துக் கொண்டது. இன்று கிறிஸ்து சிந்திய இரத்தத்தினாலான உடன்படிக்கையின் பங்காளிகளாக தேவன் மனுக்குலத்தை அழைத்திருக்கிறார் என்றால், அது பிரமாணங்களைக் கைக்கொள்ளுகின்ற அடிப்படையில் அல்ல; ஏனெனில், தேவன் நமது பெலவீனங்களை அறிந்தவர். மாறாக, தமது கிருபையினால் அவர் நம்மைத் தம்முடன் சேர்த்துக்கொண்டு, தமது உடன் படிக்கையை இன்றும் காத்து வருகிறார்.


தெய்வீக உடன்படிக்கை

“நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்” (லேவி,26:12).

“அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்” (எரே.32:38).

“என் வாசஸ்தலம் அவர்களிடத்தில் இருக் கும், நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்” (எசே. 37:27).

“நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன்” (2கொரி.6:16).

இதுதான் தேவன் மனிதனோடு செய்து கொண்ட உடன்படிக்கை. தேவன் உலாவி வாசம்பண்ணும் ஆலயம் இன்று நாமேதான் (1கொரி.3:16, 619).

தேவன் நம்மேல் பாராட்டிய கிருபை யினாலும் இரக்கத்தினாலும், தாம் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி நம்மை கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்டுக்கொண்டு, நமது பலவீனங்களைப் பாராமல் நம்மைத் தமது பிள்ளைகளாக்கினாரே! அப்படியிருக்க, தேவன் வாக்குமாறாதவர், உடன்படிக்கையில் உறுதியானவர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு தேவஇரக்கத்தை நமக்குச் சாதகமாக்கி, நாம் மனம்போனபடி வாழலாமா?

இன்னுமொரு விஷயத்தையும் நாம் சிந்திக்கவேண்டும். கிறிஸ்து நமக்காகப் பலியாகி, இரத்தம் சிந்தி மரித்ததால் மாத்திரம் எல்லாம் நிறைவேறி முடிந்துவிடவில்லை. அவர் அப்படியே மரித்தேபோயிருந்தால் இன்று நமது விசுவாசம் எங்கே?


இரு விஷயங்களை உங்கள் சிந்தனைக்கு விட்டுவிட விரும்புகிறேன்.

1. கிறிஸ்துவானவர் தமது சீஷருடன் கடைசியாகப் பந்தியமர்ந்தபோது, தாம் அவர்களுடன் உண்ணுகின்ற கடைசிப் பஸ்கா இதுதான் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார் (யோவா.13:3). அவர் அப்பத்தை ஆசீர்வதித்துப் பிட்டுக் கொடுத்து, ‘இது என்னுடைய சரீரமாயிருக்கிறது’ என்றும், பாத்திரத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணிக் கொடுத்து: ‘நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள். இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது’ என்றும் சொன்னார். இது ஒன்று. அடுத்தது,

2. இத்துடன் ஆண்டவர் நிறுத்திவிடவில்லை. தொடர்ந்து: ‘இந்தத் திராட்சரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்’ என்றும் சொன்னார்.

ஆம், கிறிஸ்துவின் பணி மரணத்தில் முடிவடைந்த ஒன்றல்ல. அவர் மரணத்தை ஜெயித்தவர், இன்றும் உயிரோடிருக்கிறவர். மீண்டும் வருவார். தாம் சிந்தும் இரத்தம் நித்திய உடன் படிக்கையின் உறுதிப்பாடாக இருப்பது மல்லாமல், தமது இரண்டாம் வருகையையும் அந்தக் கடைசி பஸ்காவிலே தமது சீஷருக்கும், இன்று அவருடைய பந்தியில் அமரு கின்ற நமக்கும் ஆண்டவர் உணர்த்தியிருக்கிறார்.


சிந்தனைக்கு

கிறிஸ்து மரித்தார்; பின்னர் உயிர்த் தெழுந்தார், நாமும் அவருடன் என்றும் வாழுவோம் என்று முடிப்பதற்கு இது ஒன்றும் சிறு பிள்ளைக் கதை அல்ல. இயேசு சிலுவையில் மரித்ததால் மாத்திரம் நமது மீட்பு பூர்த்தியடையவில்லை. அதாவது, நமது விடுதலை சிலுவையில் நிறைவேற்றப்பட்டு முடிந்தது என்று எண்ணுவது போதுமானது அல்ல. ரோம.4:25, 1கொரி.15:17 பகுதிகளைப் படித்துப்பாருங்கள். கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்திருக்காவிட்டால் நமது விசுவாசமும் விருதா; நாமும் இன்னமும் குற்றவாளிகளாகவே இருந்திருப்போம்.

மகா பரிசுத்த ஆண்டவர் நமக்காகப் பாவமாக்கப்பட்டு, பாவத்தின் சம்பளமாகிய தண்டனையாக சிலுவை மரணத்தை ஏற்றார் என்பது சத்தியம். இத்துடன் காரியம் முடிந்திருக்கு மானால், கிறிஸ்து பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை இன்றும் சுமந்துகொண்டவராகவே இருந்திருப்பார். மாத்திரமல்ல, பாவத்தையும் இன்னமும் சுமந்துகொண்டிருந்திருப்பார். ஆகவே, அவர் பிதாவின் சந்நிதானத்தைச் சேர்ந்திருக்கவும் முடியாது; அந்தப் படியே நாமும் சேரவும் முடியாது.

ஆனால் பிதாவோ, தமது குமாரன் செலுத்திய பலியை ஏற்றுக்கொண்டு, அவர் ஏற்றுக்கொண்ட குற்றங்களிலிருந்தும் அதன் சம்பளமாகிய மரணத்திலிருந்தும் அவரை விடுவித்தார். தேவன், இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியதால், அவரது நீதி விளங்கியது. பாவமும் மரணமும் பரிகரிக்கப்பட்டு, இயேசு உயிர்த்தெழுந்ததால், இன்றும் இயேசு பிதாவோடு இருக்கிறார் என்ற நிச்சயம் நமக்குண்டானது. பாவிகளாகிய நமக்கு கிறிஸ்துவினாலுண்டான இந்த நீதி தேவை. இந்த நீதியை நாம் கிறிஸ்துவின் மரணம் உயிர்த்தெழுதல் இரண்டிலுமிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம். இதனாலே என்றும் நாம் இயேசுவோடு வாழும் நிச்சயத்தையும் பெற்றிருக்கிறோம். இங்கேதான் உடன்படிக்கையும் நிறைவேறிற்று.

ஆகவே, ஏதேனிலே தேவன் சொன்ன வாக்கும், ஆபிரகாமுடனும் தாவீதுடனும் அவர் செய்துகொண்ட உடன்படிக்கையின்படியும், மோசேயுடன் தேவன் செய்த உடன்படிக்கையின் உறுதிப்பாட்டிலும், இவற்றைத் தொடர்ந்து கிறிஸ்துவின் இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கையின் நிச்சயத்திலும் இன்றும் தேவன் மாறாதவராகவே இருக்கிறார். நாம் அவருடைய நித்திய ராஜ்யத்தில் சேரும் வரைக்கும் தேவன் தமது உடன்படிக்கையில் மாறவேமாட்டார். அப்படியிருக்க, கிறிஸ்துவின் இரத்தத்தினாலான இந்த நித்திய உடன்படிக்கையின் பங்காளராக நம்மை அழைத்த தேவனுக்கு நாம் உண்மையற்றவர்களாக ஜீவிக்கலாமா? அன்றைய இஸ்ரவேலைப்போல நாமும் இந்த உடன்படிக்கையை அவமதிக்கலாமா? மாறாத உடன்படிக்கையின் இரத்தத்தை, நம்மைப் பரிசுத்தம் செய்த அந்த இரத்தத்தை நாம் அசுத்தமென்று எண்ணலாமா? ஒவ்வொரு ஆண்டிலும் உடன்படிக்கை ஆராதனையில் செய்கின்ற உடன்படிக்கையை அடுத்த விநாடியே நாம் மறந்து போகிறோமே, இது கிருபையின் ஆவியை நிந்திப்பதுபோலாகாதா?

எனவே சிந்திப்போம்! மனந்திரும்புவோம்!! உடன்படிக்கையில் மாறாதவராகிய தேவனுடைய பிள்ளைகள் நாம் என்ற பொறுப்புணர்வுடன் அவருக்கே சாட்சியாக வாழ நம்மை அர்ப்பணிப்போமாக!!! ஆமென்.