வாழ்வில் ஒளி வீசும் அன்பு


“முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்” (எபேசியர் 5:8).

இவையெல்லாம் வாசிப்பதற்கு அல்லது கேட்பதற்கு மிக இனிமையாகத்தான் இருக்கின்றது. ‘நீர் என்னை அந்தகாரத்தின் இருளிலிருந்து ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு அழைத்தீர், ஸ்தோத்திரம்’ என்று நாம் ஜெபிக்கும்போது ஆவியிலே திளைத்துப்போகிறோம். நீங்கள் உலகிற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் என்று இயேசு சொன்னது நமக்கு மனப்பாடம்.
இவை யாவும் நமக்குத் தெரிந்த விஷயங்கள். ஆனால், எப்படி இவற்றை நமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துகிறோம்? ஒளியின் பிள்ளைகளாக நடப்பதுதான் எப்படி? அப்படி ஒரு கேள்வியைக் கேட்டுப்பார்த்தால்தான் நாம் எந்த வழியில் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதை நம்மால் தெரிந்து கொள்ளமுடியும். இன்று எல்லோருக்கும் அறிவு மிக அதிகம். கல்வியும் மிக அதிகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் காலம் இது. அது நல்லதும், அவசியமானதுமாகும். ஆனால் எந்தக் கல்வியும், எந்த அறிவும் கிறிஸ்துவை நமது வாழ்வில் மகிமைப்படுத்தாவிட்டால், கிறிஸ்துவை வெளிப்படுத்தாவிட்டால் அவற்றால் பயன் ஏது?

பரிசுத்த வேதாகமம் அறிவை மாத்திரமல்ல, கற்றுக்கொள்கின்றவற்றை ஆக்கபூர்வமாக்கவும், அனுபவ ரீதியாக வாழ்ந்துகாட்டவும்கூட நமக்கு வழி காட்டாமல் விடவில்லை. எகிப்திலிருந்து இஸ்ரவேலை வெளியே அழைத்து வந்த தேவன், என் வேலை முடிந்தது என்று அவர்களைக் கைவிடவில்லை. அடிமைத் தனத்திலிருந்து அவர்களை விடுவித்து அந்த பார்வோனுக்கு பாடம் புகட்டுவது தேவநோக்கமல்ல. அல்லது, அவர்கள் தாமாகவே போய் கானானைச் சென்றடையட்டும் என்பதும் அவர் எண்ணமல்ல. அவருடைய நோக்கம் தூர நோக்குடையது. ஆகவேதான் ஒவ்வொரு விநாடியும்கூட கர்த்தர் அவர்களுடன் கூடவே இருந்து, அவர்களை நடத்தினார். ஏனெனில் அன்றாட வாழ்க்கை மிக முக்கியம். விடுதலையில் மட்டுமல்ல, அன்றாட ஜீவியத்திலும் கர்த்தருக்கு நாம் சாட்சிகளாக ஜீவிக்க வேண்டும். அதுதான் மிக முக்கியம். கிறிஸ்தவம் என்பது வெறும் அறிவு அல்ல. அது அனுபவம்.

ஆகவே, ஒளியாயிருங்கள் என்று சொன்ன ஆண்டவர், எப்படி ஒளியாயிருக்கவேண்டும் என்று வாழவேண்டிய முறையையும் தமது வார்த்தையிலேயே கொடுத்திருக்கிறார். “ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான். தன் சகோதரனிடத்தில் அன்பு கூருகிறவன் ஒளியிலே நிலை கொண்டிருக்கிறான்…” (1யோவான் 2:9,10).

ஒருவரை நாம் விரும்பாவிட்டால் அல்லது யாராவது ஒருவருடன் நமக்கு ஒத்துவராவிட்டால் நாம் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதையா இந்த வசனம் சொல்லுகிறது? நம்மோடு ஒத்துவராதவர்களை நாம் விரும்பாமல் இருப்பதைக் குறித்து யோவான் இங்கே எழுதவில்லை. எல்லோரும் எல்லாரோடும் மனம் ஒத்தவர்களாக நடப்பது கடினம். இந்த வசனத்தில் பிறனை எதிரியாக நினைத்து உதாசீனப்படுத்துமளவிற்கு அவனைக் குறித்த நமது மனநோக்கு பற்றியே யோவான் குறிப்பிடுகிறார். கிறிஸ்தவ அன்பு என்பது வெறும் உணர்ச்சி அல்ல; அப்பப்போ பொங்கி எழுந்து அடங்கிப்போக; அது நமது தெரிவு. எனக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் அடுத்தவனை நேசிப்பேன், அவனது நலன் கருதி நடப்பேன் என்பது நாம் தெரிந்துகொள்ளும் தெரிவு. சிலசமயம் பிறனுடைய நலன் கருதியே நாம் சில கடின நடவடிக்கைகளை நல்ல மனநோக்குடன் எடுக்க நேரிடும். அந்த வேளையில் நாம் குறிப்பிட்டவரை வெறுப்பது போலவும் தோன்றும். ஆனால் கர்த்தர் நமது உள்ளங்களை அறிந்திருக்கிறாரே. ஆகவே, எப்போதும் நல்ல மனநோக்குடன் தேவ பயத்துடன் நடந்துகொள்ள பிரயாசப்பட வேண்டும். கிறிஸ்தவ வாழ்வில் வளர அது மிக முக்கியம்.

இந்த இடத்தில் நான் ஒரு சாட்சியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு முதல் மூன்று நாட்களாக, எந்தவித பிரயோஜனமுமற்ற ஒரு காரியத்திற்காக ஒரு சகோதரி என்னோடு பேசாமலே விட்டுவிட்டார்கள். எனக்கு அது மனதுக்கு பெரிய பாரமாகவே இருந்தது. நானாக பேசவா என்று சிந்தித்தபோது, இல்லை, இது பெருமையோ கர்வமோ இல்லை, இப்படி நடந்த முந்திய சந்தர்ப்பங்களிலே நானாகவே பேசுவேன். ஆகவே, அந்த சகோதரியும் சற்று உணரவேண்டும், அவளும் தேவனுடைய பிள்ளை, அவளும் கர்த்தருக்குள் வளரவேண்டும் என்ற சுத்தமான மனச் சாட்சியோடு அமைதலாக இருந்தேன். இந்தக் கட்டுரையை மிகுந்த மனப்பாரத்துடன்தான் எழுத ஆரம்பித்தேன். எழுத எழுத மனதுக்கு கஷ்டமாகவே இருந்தது. ஆனாலும் என் தேவன் என் உள்ளத்தை அறிந்திருக்கிறார் என்ற உறுதியான தைரியத்தோடுதான் மேலேயுள்ள பகுதியை எழுதி முடித்தேன். எழுதி முடிக்கவும், அச் சகோதரியின் தொலை பேசி அழைப்பு வரவும் சரியாக இருந்தது. நான் அதிர்ந்துபோனேன். உள்ளத்தின் ஆழத்திலிருந்து கர்த்தருக்கு நன்றி சொல்லிவிட்டு அவளோடு பேசினேன். ஒரு மனக்கசப்பும் இல்லை. ஏன் மூன்று நாட்களாகப் பேசவில்லை என்ற கேள்வியோ விளக்கமோ தர்க்கமோ இல்லை. கர்த்தர் எங்களுக்குள்ளே இருந்த மவுனத்தை உடைத்தார். கர்த்தரை நோக்கி நமது பிரச்சனைகளை சொல்லும்போது அவரது வசனத்திற்கு கீழ்ப்படிந்து நடக்கவும், ஒளியாக வாழவும் அவர் நமக்கு உதவி செய்வார்.

நாம் ஒளியின் பிள்ளைகளாக வாழ வேண்டும், நம்மில் பிரகாசிக்கும் கிறிஸ்துவின் ஒளி இருளில் இருக்கும் அநேக பிள்ளைகளுடைய வாழ்விலே வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் நாம் அறிந்திருக்கும் அறிவு. அப்படியாக ஒளியின் பிள்ளைகளாக வாழ நாம் செய்யவேண்டியது என்ன? நம்முடைய அன்றாட வாழ்வில் அது வெளிப்படுவதற்கு நமது வாழ்க்கை முறை எப்படி அமைய வேண்டும் என்பதுவே கேள்வி.

‘அன்பு’, இது ஒன்றுதான் நாம் ஒளியின் பிள்ளைகளாக ஒளியிலே நடப்பதற்கு ஒரேயொரு திறப்பாகும். இதுவே பூட்டப்பட்டுள்ள, துருப்பிடித்துள்ள பல கதவுகளைத் திறக்கின்ற ஒரே திறப்பு. ஏனெனில், மனதிலே பகையை வைத்துக்கொண்டு பாடலாம், பிரசங்கிக்கலாம், பெரிய பணிகள்கூட செய்யலாம்; ஆனால் ஆவிக்குரிய வாழ்வில் வளரவே முடியாது. தேவனோடு நல்லுறவில் வளருவதுதான், அடுத்தவனுடன் நல்லுறவில் நாம் வளர நம்மை நடத்தும் ஊன்றுகோலாக இருக்கிறது. இன்னொரு பக்கமாகச் சிந்தித்தால், அடுத்தவனுடன் நல்லுறவில் இருப்பவனே, தேவனோடு நல்லுறவில் இருப்பவன் என்று சொல்லலாம்.

இந்த அன்பு நமக்குப் புதிய பாடம் அல்ல. இது நேசம் பாசம் காதல் என்று பலவிதங்களில் வர்ணிக்கப்படுகிறது. இந்த அன்பு நமக்குள் இருக்குமானால் நாம் பல காரியங்கள் செய்யலாம்; செய்கிறோம். பிறருக்கு உதவி செய்யலாம், பிறரின் கவலைகளில் பங்கெடுக்கலாம், கொடுக்கலாம், கூட நடக்கலாம், இப்படியாக எதுவும் செய்யலாம். ஆனால், பிறரோடு நமக்குள்ள உறவில், இந்த அன்பின் நிமித்தம் நாம் முன்னெடுக்க வேண்டிய பல படிகளை நாம் தாண்டமுடியாமல் தவிக்கிறோம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எல்லாம் நன்றாக அமையும்போது அன்பு செலுத்துவது நமக்கு ஒன்றும் கடினமேயில்லை. ஆனால் நாம் தாக்கப்படும் சந்தர்ப்பங்கள் அமையும்போதும், நமது வாழ்வில் பிறரால் பிரச்சனைகள் எழும்போதும், நம்மீது அநியாயமாய் குற்றங்கள் சுமரும்போதும் அதே அன்பை நம்மால் வெளிக்காட்ட முடிகின்றதா? அங்கேதான் நமது கிறிஸ்தவ வாழ்வு கேள்விக்குறியாகிறது. நமது வெளிச்சம் எவ்வளவு பிரகாசமுள்ளது என்பது அப்போதுதான் விளங்குகிறது.

ஆக, நாம் ஒளியின் பிள்ளைகளாக வளருவதற்கு அன்றாட வாழ்வின் சூழ்நிலைகள் சம்பவங்கள் முக்கியமாக துன்ப துயரங்கள், உடல் மனவருத்தங்கள் எல்லாமே பெரும் பங்கு வகிக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் துன்ப தொல்லைகள் நமது வாழ்வின் வெளிச்சத்தை அணைத்துவிடுவது இல்லை; நமது வெளிச்சம் பிரகாசித்து எரிய அவை நமக்கு உதவி செய்கின்றன. எப்படி அது ஆகும்? அந்த சூழ்நிலைகளை சந்தர்ப்பங்களை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம், எந்த மனநோக்கோடு அணுகுகிறோம் என்பதில்தான் அவை நமக்கு உதவுகின்றனவா அல்லது உபத்திரவப்படுத்துகின்றனவா என்பது விளங்கும். முக்கியமாக அந்த கடினமான சூழ்நிலைக்கு அல்லது சம்பவத்திற்குக் காரணமான நமது சகோதரரைக் குறித்து நமது மனநிலை அல்லது மனநோக்கு, இதுதான் மிக மிக முக்கியம். கர்த்தர் எல்லோருக்காகவும் இரத்தம் சிந்தினார் அல்லவா! இந்த வகையில், அதாவது, பிறர் நம்மைக் காயப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களில் நமது அன்பு எப்படிப்பட்டதாக வெளிப்பட வேண்டும், நமது வெளிச்சம் எப்படிப் பிரகாசிக்க வேண்டும் என்பதைக் குறித்து பல விஷயங்களை பல கோணங்களில் நாம் சிந்திக்கலாம், செயற்படுத்தலாம். இந்தக் கட்டுரையில் பிறருடனான நல்லுறவில் வளருவதால் நம் வாழ்வின் வெளிச்சம் பிறர் முன்னிலையில் பிரகாசிக்கும் முகமாக, முக்கியமாக இரு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வாஞ்சிக்கிறேன்.

1. நன்றி சொல்லு:
பல சூழ்நிலைகள், பலவிதங்களில், பலவித ஆறாத, ஆழமான வடுக்களை நமது மனதிலே ஏற்படுத்திவிடுகின்றன. அதில் முக்கியமானது, நாம் எதிர்பார்த்திருக்கிறவர்கள், நாம் அதிகமாக நேசிக்கிறவர்கள், நம்மைத் துக்கப்படுத்தும்போது, அவர்களால் நாம் ஏமாற்றமடையும்போது, ஏற்படுகின்ற வேதனை மிக மிக அதிகம் என நான் எண்ணுகிறேன், அந்த மனப்புண்கள் மாறாத தாக்கங்களைக்கூட ஏற்படுத்தி விடுகின்றன. அப்படியான சந்தர்ப்பங்களில் அந்த குறிப்பிட்ட நபருடைய விஷயத்திலே நாம் எப்படி மறுதாக்கத்தை வெளிப்படுத்துகிறோம்? அல்லது, எந்தவிதத்தில் நமது மனவேதனையை வெளிப்படுத்துகிறோம் என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம். அழுகிறோம், நாலுபேரிடம் ஓடி ஓடிச் சொல்லுகிறோம், ஏன் ஆண்டவரே, அவரை மாற்றும் என்று சுயநோக்கோடு கதறி ஜெபிக்கிறோம். அந்த நபரையோ அந்த சம்பவத்தையோ மறக்கவே முடியாதபடி திண்டாடிப் போகிறோம். இல்லையா! இது இயல்பு.

மூன்றரை ஆண்டுகளாக இயேசுவோடு கூடவே இருந்த யூதாஸ், இயேசுவுக்கு எதிரானவர்களோடு சேர்ந்து அவரைக் காட்டிக் கொடுக்கச் சம்மதம் செய்துவிட்டு, திரும்பவும் வந்து இயேசுவோடு கூடவே பந்தியமர்ந்தான் என்றால் அவனைக் குறித்து என்ன சொல்லுவது? அவன் தமக்குத் துரோகம் செய்துவிட்டான் என்பது இயேசுவுக்கும் தெரியும். ஆனால் அவரோ மறைமுகமாக, மற்ற சீஷருக்கு அவனைக் காட்டிக்கொடுக்காமல், அவன் செய்யப்போகும் காரியத்தை அவனுக்கே உணர்த்தி, சிநேகிதனே என்று அழைத்து, அப்பத்தை ரசத்திலே தோய்த்து அவன் கையில் கொடுத்தாரே, அந்தநேரம் முழு மனுஷனாய் அந்த இடத்திலே உட்கார்ந்திருந்த இயேசுவின் உள்ளம் எப்படி உடைந்திருக்கும் என்பதை நம்மால் சிந்திக்க முடிகிறதா? பிதாவின் சித்தத்தைத்தான் தான் நிறைவேற்றப்போகிறேன் என்பது இயேசுவுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தாலும்கூட, அந்த வேதனையின் கொடூரத்தைத் தெரிந்திருந்தவராக, அதற்கு தன் நண்பனே காரணமாகிறான் என்றபோது அதை யாரால்தான் தாங்கிக்கொள்ள முடியும்? ஆனால் இயேசு அந்த நிலையிலும் அவனை நேசித்தார் என்பதுதான் உண்மை.

இயேசுவுக்கு வந்த அந்த சூழ்நிலை நம்மில் யாருக்கும் வரப்போவதில்லை. ஆனால் அந்த மாதிரி காரியங்கள் நமக்கு ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்கள் உறவினர்கள் நாம் அதிக அன்பு வைக்கிறவர்கள், மாத்திரமல்ல, நம்மை நேசிக்காதவர்கள், எதிரிகள் என்று நாம் நினைக்கிறவர்கள் விஷயத்தில்கூட ஒரு கிறிஸ்தவனுடைய எதிர்ச்செயல் கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறதாகவே இருக்கவேண்டும். ஆகக் குறைந்தது அந்த குணாதிசயத்தில் நாம் வளர முயற்சிக்க வேண்டும்.

அதற்கு ஒரு வழி உண்டு. நாம் எந்தவிதத்திலாவது தாக்கப்படும்போது, சம்பந்தப்பட்ட நபருக்காக நாம் ஆண்டவருக்கு முதலாவது நன்றி சொல்ல கற்றுக்கொள்வோமாக. இது மடைமைத்தனம் என்று நினைக்கலாம். ஆனால் ஒரு கிறிஸ்தவனுக்கு இது மிகுந்த அழகைக் கொடுக்கும். ஏன் தெரியுமா? அந்த நபரால்தானே நாம் அதிகமாக தேவனைத் தேடுகிறோம். அந்த நபர் நம்மை வெறுப்பதனால் அல்லது அவர் செய்த துரோக செயலால்தான், நாம் பொறுமையைக் கற்றுக் கொள்ள வாய்ப்பைப் பெறுகிறோம். அவரால்தான் நம்மைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபிக்கும்படி ஆண்டவர் கற்றுத்தந்ததை பயிற்றுவிக்கிறோம். மொத்தத்தில் அந்த நபரால்தான் இயேசுவை நமது வாழ்வில் தரித்துக்கொள்ளும்படி, அமைதி சாந்தம், அடக்கம், பாடுகளிலும் சந்தோஷம், எல்லாம் பெற்றுக்கொள்கிறோம்.

மொத்தத்தில் அந்த நபர் நமது நண்பராயிருந்தாலென்ன, எதிரியாயிருந்தாலென்ன அவர் நமக்கு நன்மைதான் செய்கிறார். ஆகவே, முதலாவது அந்த நபருக்காக ஆண்டவருக்கு நன்றி சொல்லக் கற்றுக்கொள்வோமாக. அது நமக்கு மிகுந்த ஆறுதலை மாத்திரமல்ல, நமது பதில் செயல்களின் போக்கையே மாற்றிப் போடும் என்பது உறுதி. நமது மனதுக்கும் மிகுந்த ஆறுதலாக இருக்கும்.

ஆகவே, யாரால் நாம் மனவேதனைக்குள்ளாகிறோமோ, துயரப்பட நேரிடுகிறதோ அவர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி சொல்லக் கற்றுக்கொள்வோமாக. அப்போது நமது வாழ்வின் இருண்ட பகுதிகள்கூட ஒளிவீச ஆரம்பித்துவிடும்.

2. நான் பிறருக்குச் செய்யாதிருத்தல்:
இந்த நாட்களிலே யாருக்கு எதைச் சொன்னாலும் அவர்கள் கேட்டு நடப்பது மிகவும் குறைந்து வருகிறது. பெற்றோர் சொல்வதைப் பிள்ளைகளே கேட்காதபோது, பிறர் எப்படிக் கேட்பார்கள். குற்றத்தை ஒப்புக்கொள்வதோ, தமது பிழைகளை உணர்ந்து அதைச் சரிப்படுத்தவோ யாரும் ஆயத்தமாகயில்லை என்பதுதான் உண்மை. தங்கள் காரியங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் எல்லாரும் வைத்திருப்பார்கள். தவறான போதனைகளைக் கொண்டு வருகிறவர்கள்கூட அதை நிரூபிக்கின்ற திறமை படைத்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். அடுத்தது, ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மாற்றவே முடியாது. புத்திமதி சொல்லலாம், ஆனால் நாம் எவரையும் மாற்றிவிட முடியாது. ஆனால் நாம் ஒரு காரியம் செய்யலாம்.

“ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள்” (1தெச.5:15). தீமைக்குத் தீமை செய்யாதிருப்பது ஒன்று, எல்லோருக்கும் நன்மை செய்யவேண்டியது இன்னொன்று. தீமை செய்தவனுக்கு தீமையை பதிலாகச் செய்யக்கூடாது என்பது நமக்குத் தெரியும். ஆனால் எல்லோருக்கும் நன்மை செய்வது என்பது இரு பகுதிகளைக் கொண்டது. ஒன்று, தீமை செய்தவனுக்குத் தீமை செய்யா திருப்பது, அடுத்தது, மற்ற எல்லோருக்கும்கூட நன்மை செய்வது. அந்த நன்மை என்ன? பல பதில்களை நீங்கள் சொல்லலாம். அவையெல்லாவற்றையும் பார்க்கிலும் மேலானதொன்றை நாம் சிந்திப்போமாக. அந்த நன்மை என்ன?

நாம் எந்தப் பகுதியில் நமது வாழ்வில் தாக்கப்பட்டு வேதனைப்பட்டோமோ, எந்த விதத்தில் நாம் ஏமாற்றப்பட்டு துயரப்பட்டுத் தவித்தோமோ, அந்த விதங்களில், நம்மால் அடுத்தவன் வேதனைப்படாதபடி தவிக்காதபடி நமது வாழ்வை கவனமாக வாழலாமே.

நமக்கு, அடுத்தவரோ, நாம் நேசித்தவரோ இடறலாயிருந்தமாதிரி நம்மை நேசிக்கிறவர்களுக்கும் அடுத்தவர்களுக்கும் நாம் இடறலாயிராதபடி நமது நடக்கையைக் கர்த்தருக்குள் காத்துக்கொள்ளலாமே. இதற்கும் கர்த்தர் நமக்கு நிச்சயம் பெலன் தருவார். ஏனெனில் இதற்கும் நமக்கு மாதிரி இயேசுகிறிஸ்துதான்.

முடிவு:
எழுதுவதற்கு, சிந்திப்பதற்கு, பிறருக்குச் சொல்லுவதற்கு இலகுவானதாயிருந்தாலும், செய்வதற்குக் கடினமான இரு விஷயங்களைக் கவனித்தோம். ஒன்று, நம்மைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக தேவனுக்கு நன்றி சொல்லுதல். அடுத்தது, நாம் எவ்விதத்தில் துயரத்துக்குட்படுத்தப்பட்டோமோ, அதே துயரம், நம்மால் பிறருக்கு ஏற்படாதபடி கவனமாக வாழுதல். இவை இரண்டிற்கும் தேவ ஒத்தாசை தேவ பெலன் மிக மிக அவசியம். பிள்ளைகளே, நமது வாழ்வில், அன்றாட சூழ்நிலைகளில் நம்மைப் பயிற்றுவிக்கவில்லையானால் நமது அறிவு நமக்கு எந்தவிதத்திலும் பயன்படாது. இயேசு நம்மில் வெளிப்படும்படி, அவருடைய ஒளி நமது வாழ்வில் வெளிச்சமாக ஒளிவீசும்படி, நம்மை இயேசுவின் கரத்தில் ஒப்புவித்து வாழுவோமாக. இவ்வுலக வாழ்வு கடினமாக இருந்தாலும், இறுதியில் நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி இவ்வுலக பாடுகளுக்கு எவ்வளவேனும் ஒப்பாகாது அல்லவா! ஆமென்.