நாமும் முதியோரும் - part 1.

சகோதரி சாந்தி பொன்னு
நன்றி - விருத்தாப்பியம் 


மனிதா உன் விலை என்ன?

தாயின் வயிற்றில் உதித்தது முதல்
தரணியில் விதையாய் மறையும்வரை
மனிதா உன் வாழ்வின் விலை
மதிக்கமுடியுமா நீ சொல்லு!

தவழும் குழந்தை என்றுன்னைத் தள்ளிடவா
அறியாப் பருவம் என்றுன்னை அதட்டிடவா
வீறுகொண்ட வாலிபனே உன் வேரறுக்கவா
வீராப்புடையவன் என்று கணக்குரைக்கவா!

தாழ்வின் உயர்விலை நீயே அறியாயோ?
உன் காலம்முடிந்தாலும் அதை நீயுணராயோ?

மூப்பிலும் நீ உயர்ந்தவன்
மூச்சு நிற்கையிலும் நீ சிறந்தவன்.
விருத்தாப்பியமும் பேசும் உன் வாழ்விற்கோர் அர்த்தம்,
விருதாவா மனிதவாழ்வு யார் சொன்னார் தப்பர்த்தம்?

படைத்தவன் பிரதி நீ, படைப்புக்கெல்லாம் மகுடமும் நீ
பலங் கெட்ட நேரத்திலும் படைத்திடு உன் சரித்திரத்தை!
உலகை நீ மறந்தாலும் உலகம் உன்னை மறக்காது
விதையாய் நீ சாகும்போதும் தொடர்ந்திடும் உன் அடிச்சுவடு!

“விருத்தாப்பியம்” என்ற கைநூலின் தொடர்ச்சியாக மறுபடியும் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இக் கைநூலானது, கைநூலாக எழுதப்படவில்லை. வாசிக்க முடியாத முதியோரை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘Audio Cassette’ இல் கொடுக்கப்பட்ட செய்தியே கைநூலாக வெளிவந்தது. ஆனால், இன்று இக் கைநூல் இன்னமும் பலருடன் உறவாடிக்கொண்டிருப்பதை உணர்ந்து, இன்னும் சில காரியங்களை இக் கைநூலுடன் இணைக்க மனதிலே உந்துதல் உண்டானது. இக்கை நூலானது முழுக்க முழுக்க முதியோர் பயனடைய என்றே வெளியிடப்பட்டது. இருந்தாலும், இதன் தொடர்ச்சியை முதியோருக்கு மாத்திரமல்ல, மூப்பு எய்யும் பருவத்தைச் சந்திக்கவேண்டிய ஒவ்வொருவருக்கும், அத்துடன், தாமும் ஒருநாள் அந்த முதியோர் ஸ்தானத்திற்கு மூப்பெய்வோம் என்பதைச் சிந்திக்கவே நேரமின்றி தங்கள் பொறுப்பிலுள்ள முதியோரைப் பராமரிக்கும் பொறுப்பிலுள்ள ஒவ்வொருவருடைய சிந்தனையைத் தட்டி எழுப்பவேண்டும் என்ற வாஞ்சை யோடேயே இதனை எழுதுகிறேன்.


முதிர்நிலை:

வயது முதிர்ந்தவர்கள் என்னும்போது, அவர்கள் வயதில் மூப்பெய்தியதைக் குறிப்பிடுகிறோமா, அல்லது, அவர்கள் வாழ்வில் முதிர்ச்சி பெற்றவர்கள் என்று சொல்லுகிறோமா? வயதின் முதிர்ச்சி தவிர்க்க முடியாதது. ஆனால், வயது முதிர்ந்தாலும் மனிதவாழ்வில் காணப்பட வேண்டிய உண்மையான முதிர்ச்சி காணப்படாவிட்டால் என்ன பயன்? ஆனால், இன்று நமது முதியோரின் வாழ்வில் காணப்படுகின்ற அர்த்தமுள்ள முதிர்ச்சியை இன்றைய இளைய சமுதாயம் எவ்வளவாகக் கனப்படுத்துகிறது என்பது கேள்விக்குறிதான்!

நமது முதியோரின் வாழ்வில், அனுபவத்தில், அறிவில், சிந்தனையில், சிந்தையில் ஏற்படுகின்ற முதிர் நிலையானது அவர்களது பேச்சிலும் செய்கையிலும் வெளிப்படத்தான் செய்கிறது. முன்னர் எடுத்ததெற்கெல்லாம் அவசரக் குடுக்கையாயிருந்தவர், இப்போது பொறுமையாய் செயற்படுவார். கேட்டால், அனுபவத்தில் அறிந்தது என்று சொல்லுவார். முன்பின் யோசியாமல் வார்த்தைகளைக் கொட்டிவிடுகிறவர், இப்போது நிதானித்துப் பேசுவார். கேட்டால், அனுபவம் பேசுகிறது என்பார். சரீரத்தில் பெலம் குன்றிப்போனாலும், மனம் அதிக பெலமடைந்திருக்கிறதை அவர்களது முகமே சாட்சி சொல்லும். பல முதியோர் தங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்கு எடுத்ததெற்கெல்லாம் ஆலோசனை சொல்வதுண்டு. இதுவே, அநேக இளையவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கிறது. ‘வயது போனால் பேசாமல் ஒருபக்கம் இருக்கவேண்டியதுதானே, இந்தக் காலத்தைப்பற்றி இவர்களுக்கென்ன தெரியும்’ என்று முறுமுறுக்கின்ற பிள்ளைகள்தான் எத்தனைபேர்! போதாதற்கு, ‘தாங்கள் எல்லாவற்றையும் அனுபவித்துக் களித்துவிட்டு, இப்போ மாத்திரம் எங்களைத் தடுக்கிறார்கள்’ என்று குற்றமும் சுமத்திவிடுகின்றனர் இக்காலத்துப் பிள்ளைகள்.

இன்னும் பல பிள்ளைகள் தங்கள் வீட்டிலுள்ள முதியோரைக் கணக்கெடுப்பதே இல்லை. முதியோரைக் கேட்டால், ‘நாங்கள் பட்டு அழுந்தியதுபோல நமது பிள்ளைகளும் வாழ்வின் துயரங்களில் அகப்பட்டு மாண்டு போகக்கூடாது என்பதற்காகத்தானே சொல்கிறோம்’ என்பார்கள். எழுந்து நடமாடக் கடினமாயினும் முதியோரின் வாயில் பிறக்கும் வார்த்தைகள் மிக மிகப் பெறுமதிப்பானவை என்பதை, பிள்ளைகள் தங்கள் இளவயதில் கணக்கெடுக்காமல், தாங்கள் மூப்பெய்தும்போதுதான் சிந்திக்க ஏவப்படுகிறார்கள். காலங்கடந்த ஞானத்தால் என்ன பயன்? (இதையெல்லாம் இன்றைய இளைய சமுதாயம் கணக் கெடுக்கிறதா?).


முதியோரின் பெறுமதிப்பு:

வயதிலும் வாழ்விலும் ஏற்படுகின்ற முதிர்ச்சி நிலை மிகவும் பெறுமதிப்பு வாய்ந்தது. அந்த அருமை தெரியாமல், வாழ்வின் சூழ்நிலைகளையும், வருமானங்களையும், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலங்களையும் சாக்காகக் காட்டி, தம் பெற்றோரின் பொறுப்பையும் தட்டவில்லை என்ற பெயரில் அவர்களுக்கு ஏதோவொரு உதவிசெய்து விட்டு, தள்ளிப்போகும் பிள்ளைகள்தான் இன்று சமுதாயத்தில் அதிகரித்துவருகிறார்கள். தாங்களும் ஒருநாள் முதியோர் நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதை பிள்ளைகள் இப்போது உணருவதேயில்லை என்று சொல்வதிலும், அதைக் குறித்துச் சிந்திக்கமுடியாதபடிக்கு வாழ்க்கைத் தரங்களும் முறைகளும் அவர்களைச் சிறை வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை.

தங்கள் பெற்றோரைத் தள்ளிவைக்கிறவர்களைப் பார்க்கிலும், அவர்களைவிட்டுத் தள்ளினாற்போல் வாழுகின்ற பிள்ளைகள்தான் அதிகம். பெற்றோருக்கே இந்தக் கதியென்றால், சமுதாயத்திலே வாழுகிற அல்லது உறவுகளுக்குள்ளே வாழுகின்ற, உதவியற்ற முதியோரின் நிலை என்ன? இன்று, சமுதாயத்திலே வயோதிபர்கள் இல்லங்கள் வெவ்வேறு நவீன பெயர்களைத் தாங்கிக் கொண்டு நாளுக்குநாள் முளைத்தெழும்பிக் கொண்டுதான் இருக்கின்றன. ‘இப்படிப்பட்ட இல்லங்களை ஒழிக்கவேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் தங்கள் பொறுப்பை உணருவார்கள்’ என்று பொரிந்து தள்ளினார் ஒருவர். ‘அப்படிச் சொல்லாதேயும், இந்த இல்லங்கள் இல்லையெனில் என்னைப் போன்றவர்களுக்கு வேறு வழியே இல்லை. நமது பிள்ளைகளுக்கு நாம் பாரமாகியிருப்போம்’ என்றார் மற்றவர். அங்கேயும் பார்த்தீர்களா, தன் பிள்ளைகளைக் குறை சொல்ல விரும்பவில்லை அந்தப் பெரியவர். அக்கம் பக்கத்திலிருப்பவர்களைக் கூசாமல் குறை சொல்கிற வயது முதிர்ந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்காக வரிந்துகட்டிக் கொண்டு வக்காலத்துப் பாடுவதைக் கேட்கும்போது சிரிப்பாயிருக்கும். ‘அவன் பாவம், வெளி நாட்டில் இருந்துகொண்டு என்ன செய்வான்’ இது ஒரு பாட்டியம்மாவின் பல்லவி! ‘மகளுக்கு என்னை விட மனமேயில்லை. ஆனால், என்ன செய்வது, அவளின் வீடு மிகவும் சின்னது, கஷ்டம்தானே’. வெடித்து வெளிவரும் அழுகையையும் அடக்கிக்கொண்டு மகள் புகழ் பாடுகின்ற அம்மாதான் இவர்கள்! இப்படி எத்தனையோ கதைகள்.

ஒரு பிரபல்யமான தேசத்தில், ஒரு கிராமத்தில், பெற்றோர் பிள்ளைகளைவிட்டுத் தாமாகவே ஓடிப்போகிறார்கள் என்ற செய்தியொன்று இன்டர்நெட்டின் மூலம் அறியக் கிடைத்தது. காரணம் என்னவெனில், வெளிநாட்டின் கருணைக்கொலைகள் இந்தக் கிராமத்தில் ‘எண்ணெய்க்குளியல்’ என்ற பெயரில் நடைபெறுகிறதாம். வயது முதிர்ந்தவர்களுக்கு எண்ணெய் வைத்துக் குளிர்நீரால் குளிப்பாட்டுவார்கள். இதனைத் தாங்க முடியாத முதியோர் நடுநடுங்கியே இறந்து விடுவர். இதற்குப் பல சாட்சிகள் கூறப்பட்டிருந்தது. அந்தச் சாட்சிகளில் பல, தமது பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவே இதனை ஏற்றுக்கொண்ட முதியோர் பரிதபித்ததைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. பிள்ளைகளைக் கேட்டால், தமது வருமானத்திற்கு வயது முதிர்ந்த பெற்றோரை வைத்துப் பராமரிப்பது கடினம் என்று அடித்துக் கூறுகின்றனர். இதில், பிள்ளைகளைக் குறைகூறுவதா? சமுதாயத்தைக் குறைகூறுவதா? அரசாங்கத்தைக் குறைகூறுவதா? அல்லது, முதிர்வயதை மனிதவாழ்வில் அனுமதித்த ஆண்டவனைக் குறைகூறுவதா?

பென்ஷன் போன்ற வருமானம், அல்லது சொத்துக்கள் உள்ள பெற்றோருக்காக பிள்ளைகள் போட்டிபோடுவதும், ஒன்றுமேயில்லாத முதியோரை கடினமாக நடத்துவதும் நமது சமுதாயத்தில் ஒன்றும் புதிதல்ல. இதுவும் வேதனைக்குரிய விஷயமே! சகோதர பாசத்திலே திளைத்திருக்கும் பிள்ளைகள், தங்கள் முதியோரை, வயது முதிர்ந்த பெற்றோரைப் பராமரிக்கும் நிலைமைக்குத் தள்ளப்படும்போது சண்டையிட்டுப் பிரிந்துபோவதும் ஒன்றும் ஆச்சரியமில்லை. ‘அம்மாவுக்குத் தேவையான துணிமணி சாப்பாடு கொடுக்கிறேன். பேசாமல் திண்டிட்டு வாயை மூடிக்கொண்டு கிடக்க வேண்டியதுதானே’ என்று எரிந்துவிழுகின்ற மகன்மாரும், ‘புருஷனா, பிள்ளையா, அப்பாவா? நான் யாரைக் கவனிக்க? சீ! இதென்ன வாழ்க்கை’ என்று பொரிந்து தள்ளுகிற மகள்மாரும், தமது குடும்பமோ, அதை அமைத்துக்கொடுத்த பெற்றோரோ, குடும்பத்திலுள்ள முதியோர்களோ, எவருமே பாரமல்ல, மாறாக, இவைகள் யாவுமே விலையேறப்பெற்ற உறவுகள், நம்பிக்கொடுக்கப்பட்ட பொறுப்புகள் என்று எப்பொழுதுதான் உணரப் போகிறார்கள்?


இவர்களெல்லாம் தங்கள் முதியோருக்கு விதித்திருக்கிற விலைதான் என்ன?

அதேசமயம், பலவித கஷ்டங்கள் மத்தியிலும் தங்கள் முதியவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கின்ற பிள்ளைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். நன்றி சொல்லுகிறேன். இந்தப் பிள்ளைகள் எல்லோருமே வசதி படைத்தவர்களும் அல்ல; வாழ்க்கையில் பெரிய காரியங்களைச் சாதித்தவர்களும் அல்ல. வெகு சாதாரணமானவர்கள்! அன்பிலும் பாசத்திலும் கட்டுப்பட்டு, தேவகிருபையினாலும் சமாதானத்தினாலும் நிரப்பப்பட்டு, பொறுப்பிலும் பொறுமையிலும் தலைசிறந்து விளங்கும் இவர்களுக்காக என்ன செய்தாலும் தகும். எனக்குத் தெரிந்த ஒரு சகோதரி, தனக்கே மூப்பெய்தும் வயது வந்தபோதும், கனடா பிரதேசவாசியாக இருந்தபோதும், வயது முதிர்ந்த தன் தாயாரைப் பராமரிப்பதற்காக தன் கணவனோடு இலங்கை தேசத்திற்குத் திரும்பி, வருடக்கணக்காக அந்தப் பொறுப்பை மிகவும் சந்தோஷத்தோடு நிறைவேற்றி வருகிறார்கள். வெளிநாடுகளிலுள்ள அவருடைய பிள்ளைகளுக்கு எத்தனையோ தேவைகள் வந்தபோதும், தன் தாயை விட்டுச்செல்ல பொறுப்புள்ளவர்கள் இல்லாததால், முதியோர் இல்லத்திலும் விட மனதில்லாதவராய், தன் பிள்ளைகளைக் கர்த்தரின் கைகளில் ஒப்புவித்துவிட்டு, தன் சரீர பெலவீனத்திலும் தன் தாயைப் பராமரித்து வருகிற இவரை நினைத்து நான் ஆச்சரியப் படாத நாட்களே இல்லை. இத்தனைக்கும் இவரது தாயாருக்கு இன்று வயது 103.


முதிர்நிலையும் மனநிலையும்:

‘இப்பவே எனக்கு ஞாபக மறதி’, ‘நாரிப் பிடிப்பு தொடங்கிவிட்டது’ அக்காலத்திலே வாதம் என்று சொன்னதை இன்று அழகான ஆங்கிலத்தில் ‘எனக்கு ஒஸ்ரியோப் போரோஸிஸ்’ என்றும் ஒஸ்ரியோ ஆத்திரைரிஸ் என்றும் இப்படி இளவயதிலேயே மக்கள் கூறத் தொடங்கிவிட்டார்கள். அதுவும் ஒரு பேஷன் போல ஆகிவிட்டது. ஆனால், தாங்கள் முதிர்ச்சியடைவதையோ மூப்பெய்துவதையோ காட்டிக்கொடுக்க விரும்புவதேயில்லை. வெளித்தோற்றத்திலே மிகக் கவனம் எடுக்கும் மக்கள் தம்மையும் அறியாமல் தமக்குள் நடக்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தயங்குவது சகஜமாகிவிட்டது. முன்னர் பெண்கள்தான் தங்கள் முக அழகில் மிகவும் கவனம் எடுப்பதுண்டு. இப்போது ஆண் பெண் என்ற வித்தியாசமே இல்லாமல் தங்கள் தோற்றங்களைத் தக்கவைக்கவும், அதனை மெரு கூட்டவும் மனிதர் படுகின்ற பாடுகள் சொல்லிமுடியாது.

“நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்” (லேவி.19:32).

“வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை” (நீதி.20:29).

வாலிபரின் அலங்காரங்களும் மாறிவிட்டது. முதிர்வயதினரில் இந்த நரையைக் காண்பதே இன்று அரிதாகி வருகிறது. இதனாலேதானோ என்னவோ, மனிதனுடைய பருவ நிலைகள் இன்று வெவ்வேறு கோலங்கள் எடுத்து, வயதுக்கு மிஞ்சிய எண்ணங்களும் செயற்பாடுகளும் ஒருபுறமும், வயதுக்கேற்காத செயற்பாடுகள் இன்னொரு புறமுமாக மனித சமுதாயமே ஆட்டங் கண்டு கொண்டிருக்கிறது. பெரியோரைக் கனம்பண்ணுதலும், முதியோருக்கு மரியாதை செலுத்துதலும் இன்று சமுதாயத்தில் குறைந்துவருவதுவும், இன்று மனித சமுதாயமே தத்தளிப்புக் குள்ளாகியிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் எனலாம்.

தோற்றங்களை மாற்றி, எவ்வளவுதான் வெளிவேஷம் போட்டாலும், மனதிலே உடலிலே வருகின்ற மாற்றங்களை, பெலன் குன்றி நிலைதடுமாறும் நிலைமையைக் கட்டுப்படுத்தவே முடியாது. எவ்வளவுதான் வெளித்தோற்றத்தை மறைக்க முற்பட்டாலும், ஒரு நிலையில் அவற்றைக் கைவிட்டு, இனி எனக்கென்ன என்று அலுத்துக்கொள்ளும் முதியோரும் இல்லாமல் இல்லை.


நாமும் முதியோரும்:

ஆகையினாலே மனிதனுடைய வெளித் தோற்றம் அல்ல; அவனுடைய உள்மாற்றத்திற்கும் அனுபவத்திற்கும் வயதுக்கும் நாம் மதிப்புக்கொடுத்துத்தான் ஆகவேண்டும். சமஸ்த இஸ்ரவேலின் அரசாட்சியும் சாலொமோனுக்குப் பின்பு அவனுடைய குமாரனாகிய ரெகொபெயாம் கைகளுக்கு மாறியது. சாலொமோனின் ஸ்தானத்தில் அவன் அமர்ந்ததில் தவறேயில்லை. ஆனால் அவனால் அதைத் தக்கவைக்க முடிந்ததா? இஸ்ரவேல் சபையனைத்தும் ரெகொபெயாமிடம் கேட்டதில் என்ன தவறு? ‘நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் இலகுவாக்கும். அப்பொழுது உம்மைச் சேவிப்போம்’ என்றுதான் கேட்டார்கள். ராஜாவும் சரியான வழியிலேதான் சென்றான். தன் தகப்பனுக்குமுன் நின்ற முதியோரோடேதான் ஆலோசனைப்பண்ணினான். அவ்வளவும் சரி. அதன் பின்பு நடந்ததுதான் ராஜ்யத்தையே பிளவுபடச் செய்துவிட்டது. ‘முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனை பண்ணி…’ (1இரா.12:8) இதனால் கலகம் உண்டாகி இஸ்ரவேல் ராஜ்யம் இரண்டாய் பிளந்தது. இதில் வாலிபரிடம் ஆலோசனை கேட்டது தவறல்ல. ஆனால், எது சரி, எது தவறு என்று சிந்திக்காமல், முதியோரின் ஆலோசனையை முற்றிலும் தள்ளிவிட்டு, சுயயோசனையும் இன்றி வாலிபரின் யோசனையில் மாத்திரம் இந்த ராஜா செயற்பட்டான். அதுதான் அவன் விட்ட தவறு. இதனால் ராஜ்யத்தில் பெரும்பான்மையான மக்களை இழந்தான்.

இன்றைய குடும்பங்களில் மாத்திரமல்ல, சபைகளில் சமுதாயங்களிலும் இதுதான் நடக்கிறது. உணர்வுள்ளவர்கள் அதற்கு இடமளிப்பது கூடாது. முதியோர் முதியோர்தான். மூத்தோர் மூத்தோர்தான், ஒருவரையொருவர் கனம்பண்ணவேண்டும் என்று விரும்புகிற கர்த்தர், இன்றைய சமுதாயம் நமது முதியோரைத் தள்ளிவைப்பதை ஏற்றுக் கொள்வாரா? என் தகப்பனாரைப் பராமரித்த காலங்களில் என் மூத்த தமையனார் சொன்ன ஒரு விஷயம் எனக்கு மிகவும் உந்துதலாகவும் பெலனாகவும் இருந்தது. அவர் கூறியது இதுதான்: ‘நம்மைப் பெற்று வளர்த்த காலங்களில் நமது பெற்றோர் எத்தனை நாட்கள் நித்திரை விழித்திருப்பார்கள், எத்தனை கஷ்டங்கள் பட்டிருப்பார்கள். நமக்கு காய்ச்சல் வந்தாலே பதறிப்போய் உணவையும் மறந்து பக்கத்திலேயே இருந்திருப்பார்கள். எவ்வளவு பணத்தைச் செலவுபண்ணி நம்மை ஆளாக்கியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்தால் இப்போது அவர்களைப் பராமரிக்கக் கிடைத்த இந்தக் கொஞ்சக்காலம் நமக்கு ஒருபோதும் பாரமாயிராது. தூக்கம் இன்றி விழித்திருப்பது துயரமாயிராது’ என்றார்.

சற்று பின்நோக்கி சிந்தித்துப் பாருங்கள். சிறுவயதிலே நாம் எந்தவிதத்திலெல்லாம் கள்ளத்தனம்பண்ணி பெற்றோரை ஏமாற்றியிருக்கிறோம். அவர்களுக்குத் தெரியாமல் என்னவெல்லாம் செய்திருப்போம். பெரியவர்களானபோதும் நாம் அவர்களுக்குச் சொன்ன பொய்கள் எத்தனை! அவர்களுடைய எவ்வளவு பணத்தை விரயமாக்கியிருப்போம். ‘என் தாயார் விடியற்காலையில் எழுந்து செய்து தந்த இட்லிப் பார்சலை என் காதலனுக்குக் கொடுத்துவிட்டு, அம்மா கேட்டபோது, ‘இட்லி நன்றாக இருந்தது’ என்றுச் சொல்லி அம்மாவை ஏமாற்றியதை நினைக்கும்போது என்னிலேயே எனக்கு வெறுப்பாயிருக்கிறது. இறுதியில் அந்த வாலிபனால் என் தாயாரும் தகப்பனாரும் அனுபவித்த அவமானங்கள் அவலங்கள் சொல்லி முடியாது’ என்று என் தோழியொருத்தி கண்ணீர்விட்டுக் கதறியது இப்பொழுதும் என் காதுகளில் கேட்கிறது.

வயது முதிர்ந்த தகப்பனார் வீட்டின் முன்சாலையில் உட்கார்ந்திருந்தால் மதிப்பில்லை என்று நினைக்கின்ற பிள்ளைகளும் இல்லாமல் இல்லை. வயதில் முதியவர்களை மதிக்கவேண்டும் என்று தங்கள் பெற்றோர் தங்களுக்குச் சொல்லித் தந்ததை மறந்து, வீட்டிலுள்ள மூப்பெய்தியவரை மதிக்க வேண்டும் என்று ஏன் இந்தப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதில்லை என்பது தெரியவில்லை. சிறு குழந்தைகளை இந்த மூப்பெய்தியவரிடமிருந்து தள்ளிவைக்கும் நாகரீகம் (கேட்டால் சுத்தமில்லை, தொற்று வியாதி வரும் என்று வெளியிலே சொல்லாத பல காரணங்கள்) இன்று குடும்பங்களிலே அதிகரித்துவிட்டது. தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்காக, தங்களைப் பெற்று வளர்த்தவர்களை வயோதிப இல்லங்களிலே விட்டுவிடுகின்ற நாகரீகமும் இன்று இல்லாமல் இல்லை.

என் தகப்பனாரைப் பராமரிப்பதற்கு உதவிக்காக வந்த ஒரு தாதிப்பெண் சொன்னது இன்னமும் என் நினைவில் இருக்கிறது. ‘ஒரு முதிர்வயது தாயாரைப் பராமரிக்கும் பணிக்காக நான் அனுப்பப்பட்டேன். அது ஒரு பெரிய பணக்கார வீடு, பெரிய பங்களா! அப்படியொரு பங்களாவை நான் பார்த்ததேயில்லை. வீட்டினுள் நுழைந்தேன். என்ன பிரமாண்டம்! உள்ளே சென்று சென்று… அந்தப் பெரிய வீட்டின் அந்தப்புரமா அது? வீட்டின் பின்கோடியில் அமைந்திருந்த ஒரு அறைக்கு என்னை அழைத்துச்சென்றனர். நான் ஒரு தாதி என்பதையும் மறந்து என் மூக்கை ஒருவிசை பொத்திக்கொண்டேன். ஒரு கட்டிலில் சுருண்டு படுத்திருந்தது ஒரு உருவம். சத்தம் கேட்டதும் ‘பிள்ளை’ என்று கூப்பிட்டுக் கையை நீட்டினார் அத்தாயார். மகளோ, ‘சரி சரி உங்களைப் பக்கத்தில் நின்று பராமரிக்க ஆள் வந்திருக்கு. பயப்படவேண்டாம்’ என்று சொல்லிவிட்டு, தேவையான யாவையும் வாங்கித் தந்துவிட்டுப் போய்விட்டார்கள். நான் அந்த அம்மாவிற்குக் கிட்டச்சென்று, அவரது மெலிந்த கைகளைத் தொட்டேன். அவரோ என்னை இறுகப்பிடித்து கொண்டார்கள். கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது. ‘மகள்’ என்றார். அவரது மகள் வந்துநிற்கிறார்களா என்று நான் திரும்பிப் பார்த்தேன். ‘மகளே, உன்னைத்தான். என்னை யாரும் தொடுவதேயில்லை. இனி நீதான் என் மகள்’ என்று தேம்பித் தேம்பி அழுதார் அந்த தாயார். படுக்கைப் புண்கள் ஏராளம். எல்லாவற்றையும் சுத்தம்செய்து, மருந்துபோட்டுப் படுக்க வைத்தபோது, அந்த தாயார் ஒரு குழந்தையைப் போலத் தூங்கியதை இன்னமும் மறக்க முடியவில்லை’ என்றாள் அந்தத் தாதி.

இந்த நிலையில் தங்கள் பெற்றோரை, வீட்டிலுள்ள முதியோரை அன்போடும் பக்குவத்தோடும் பராமரிக்கும் பிள்ளைகளுக்குத் தலைவணங்காமல் இருக்கமுடியுமா? கர்த்தர்தாமே அவர்களை ஆசீர்வதிப்பாராக! ‘பிள்ளைகள் என்றால் பெற்றோரைப் பார்க்கத்தானே வேண்டும்’ என்பார் என் தாயார். ஆனால், இந்தப் பராமரிப்பு, கவனிப்பு, விசாரிப்பு யாவும் அன்பினிமித்தம், பற்றுதலின் நிமித்தம் வரவேண்டுமே தவிர, கட்டாயத்தின் பேரிலோ முறுமுறுப்போடோ, பெரிய பாரமாகிவிட்டது என்ற நினைப்பிலேயோ வந்திடக்கூடாது. அப்படிச் செய்தால், அன்று தாய் தகப்பனுக்குரிய கொர்பான் காணிக்கையைக் கொடுத்தால் போதும் என்று போதித்த அன்றைய பரிசேயருக்கும் நமக்கும் வித்தியாசம் கிடையாது.


ஏங்கி நிற்கும் முதுமை:

பொருளாதார நிலைமை, வசதியற்ற வீடு, பிள்ளைகள் படிப்பு, அதிக உழைப்பு, பிள்ளைகளின் மேற்படிப்பு பிற்காலம் என்று பல காரணங்கள் இன்று சொல்லப்படலாம். நமது நாட்டின் சூழ்நிலைமைகளால் நாடுவிட்டு நாடு இடம் பெயர்வுகள், அகதி வாழ்வுகள் என்று இன்னும் பலவித காரணங்களால் நமது முதியோர் இன்று தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு மகன் கனடாவில், ஒரு மகள் ஜெர்மனியில் என்று பெருமைகூறும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளைக் குறைசொல்கிறார்களோ இல்லையோ, தங்கள் தனிமையில் உள்ளத்திற்குள் அழுது கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

கனடாவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தைப் பார்வையிட விரும்பிய நான், எங்களுக்கு அறிந்த ஒருவர் வாழுகின்ற இல்லத்தினுள், அவரைப் பார்க்கின்ற சாக்கில் நுழைந்தோம். என்ன அதிசயம்! அது ஒரு அற்புத இடம். முன் வரவேற்பறையே மிகவும் ஆடம்பரமாகக் காட்சி தந்தது. உட்கார்ந்து பேச இடம், பெரியதொரு தொலைக்காட்சிப் பெட்டி, நடுவிலே மேலோங்கி வளர்ந்த அழகிய மரங்கள், வண்ணவண்ணப் படங்கள்… சற்று உள்ளே போனால், என்னதான் அங்கே இல்லை. செஸ் விளையாட்டா, கேரம் விளையாட்டா என்ன இல்லை. இன்னொரு அறையிலே சிகை அலங்காரம், வெட்டவேண்டுமா, வடிவாக்க வேண்டுமா, மை பூசவேண்டுமா? எதற்கும் தயாராய் நிற்கின்ற சேவகிகள். தனி அறைகளும் உண்டு, இருவர் தங்கும் வசதியும் உண்டு. நாங்கள் பார்க்கச்சென்ற தாயார், இருவர் தங்கும் அறையின் ஒரு பகுதியிலே இருந்தார்கள். ஆனால் அந்த இருவருக்குமே எந்தவித தொடர்புமின்றி இடையிலே தடித்த தொங்கு திரை இருந்தது. அழகான இடம். இல்லாத வசதிகள் இல்லை. அந்த அம்மாவிடம் அவ்விடத்துப் பராமரிப்புக் குறித்துக் கேட்டோம். எந்தக் குறையும் சொல்லவில்லை. இறுதியில் அவர் சொன்னது: ‘என்னதான் இருந்தாலும்… எனக்கென்று இங்கே யாரும் இல்லை’ என்றார். கண்களில் முட்டிமோதிய கண்ணீரை அவரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

வெளிநாடுகளில், முதியோருக்கென்று சகல வசதிகளுடன் கூடிய தொடர்மாடிகள் உண்டு. தனியாகவோ, தம்பதியினராகவோ அங்கே வாழலாம். அங்கே வசிக்கும் ஒரு தம்பதியினரிடம் கேட்டபோது, பிள்ளைகளுக்குக் கஷ்டம் கொடுக்க விரும்பவில்லை. இது எங்களுக்கு நல்ல வசதி என்று சொன்னார்கள். மனித உணர்வுகளை மனிதனாலேயே சிலசமயம் புரிந்துகொள்ளக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் எத்தனை காலத்திற்குத்தான் அதை மறைக்க முடியும்?.