நீ பிழியப்பட ஆயத்தமா?


சகோதரி.சாந்தி பொன்னு


தூக்குதண்டனைக் கைதிகளின் மனநிலையை சிந்தித்துப் பார்த்திருப்பீர்களா? சாவு நிச்சயம் என்பது ஒருபுறம்; இந் நிலையில் அன்பான அப்பா அம்மா யாராவது அருகில் இருக்க மாட்டார்களா? இத் தண்டனை அதிசயமாக மாற்றப்படமாட்டாதா? தூக்கிலிடும்போது எப்படியிருக்கும்? இப்படியாக எத்தனை எண்ணங்கள் மனதிலே புரண்டோடும் தெரியுமா? மரணப்போராட்டத்தில் நோயுற்று இருந்த அனுபவம் உங்களுக்குண்டா? மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில், எந்த வொரு உறவினரும் அருகில் இருக்க முடியாத சூழ்நிலையில், அதேசமயம் உள்உணர்வு மங்கிப்போகாதிருக்க மனதில் என்னவெல்லாம் எண்ணங்கள் புரண்டோடும் தெரியுமா? உறவுகள் சூழ இருந்தும், சூனியமான மனநிலையில், நீங்கள் தவித்திருக்கிறீர்களா? அது மகாபெரிய கொடுமை!


இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம். இவை யாவற்றிலும் மனிதனொருவன் அனுபவிக்கும் உணர்வானது வெறும் வேதனை யென்றோ துக்கம் என்றோ சொல்லுவதற்கில்லை. இதனை “மரண வேதனை” அல்ல, “வியாகுலம்” எனலாம். இவர்களுக்கு யாரோ இருப்பார்கள். தெய்வ நம்பிக்கையும் விசுவாசமும் கூட இருக்கும். என்றாலும் எவரும் இல்லாதது போன்ற தனிமை உணர்வு; இது போதும் ஒரு மனிதனை தோற்றுப்போகாமல், ஜெயம் பெறவேண்டும் என்பதற்கு மாதிரியை வைத்துப் போனவர்தான் நமது ஆண்டவர். அதைத்தான் அவர் கெத்சமெனே தோட்டத்தில் அனுபவித்தார்.


கெத்சமெனே தோட்டம்:

இயேசு உலகில் வாழ்ந்திருந்தபோது அவரோடு அதிகமாக சம்பந்தப்பட்டிருந்த கப்பர்நகூம் பட்டணத்திலே, அந்நாட்களில் இருந்த சில புராதன அடையாளங்கள் இன்னமும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதில் ஒரு இடத்தில், ஒலிவ விதைகள் பிழியப்பட்டதன் அடையாளமாக கற்களினாலான சில உருவ அமைப்புகள் இன்றும் உண்டு. அந்தப் பெரிய கற்சாடிகளில் ஒலிவ விதைகள் போடப்பட்டு நசுக்கப்படுமாம். அதில் கிடைக்கும் முதல் எண்ணெயை வேறு பிரித்து விட்டு, திரும்பவும் பிழிதல் நடைபெறுமாம். நமது நாட்டிலே எள்ளு செக்கிலே போடப் பட்டு, நசுக்கப்பட்டுப் பிழியப்படுவதைப் பார்த்திருக்கிறீர்களா? இந்த ஒலிவ விதைகளைப்போல, எள்ளு விதைகளைப் போல ஒரு மனுஷன் பிழியப்பட்டால் எப்படி இருக்கும்?

நெய்வேலி திறந்தவெளி நிலக்கரி சுரங்கத்தில் இரவு காவலுக்கு இருந்தவர் தூங்கி விழுந்துவிட்டதால் பெல்டினால் பிடிபட்டு யந்திரத்தினுள் அகப்பட்டு நசுக்கப்பட்டவராய் வெளியே வந்து விழுந்ததாகக் கேள்விப்பட்ட சங்கதியை இன்று நினைத்தாலும் இரத்தம் உறையும். அவருடைய சரீரம் யந்திரத்திலே நசுங்கிப்போனது. ஆனால் கெத்சமேனேயில் இயேசுவோ உயிரோடேயே பிழியப்பட்டார். இது அவர் அனுபவித்த ஆத்தும வியாகுலம்!

“கெத்சமெனே” என்றால் ‘செக்கு’ என்று அர்த்தமாம். எருசலேம் நகரம் ஜனசந்தடி மிக்கதொன்று. அத்துடன் அந்த பரிசுத்த நகரத்தின் மண் தோட்டத்திற்குப் பயன்படுத்தப்படுகின்ற உரத்தினால் அசுத்தமடையக் கூடாது என்றதொரு சட்டமும் இருந்ததாம். அதனால் தோட்டங்கள் யாவும் நகரத்துக்கு வெளியே, ஒலிவ மலையிலேதான் காணப்பட்டன. அந்த வகையில் இயேசு தனிமையில் இருக்கவும், ஜெபிக்கவும், ஓய்வு எடுக்கவும் அடிக்கடி சென்று வந்த கெத்சமெனே தோட்டமானது எருசலேமுக்குக் கிழக்காக, கெதரோன் ஆற்றுக்கு அப்பாலே (யோவா. 18:1) தேவாலயத்துக்கு எதிரே (மாற்கு 13:3 ) ஒலிவ மலையிலே அமைந்திருந்தது. கெத்சமெனே என்ற பெயரைக்கொண்டு, இந்த இடத்திலே ஒலிவ மரங்களும், ஒரு செக்கும் இருந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. உவமானமாகச் சொன்னால், இயேசு மரணவியாகுலம் என்ற செக்கிலே பிழியப்பட்ட இடம்தான் இந்த கெத்சமெனே தோட்டமாகும்.


கெத்சமெனேயில் இயேசுவின் அனுபவங்கள்:

1. இயேசு சோதனைக்கு உட்பட்டார்:

ஜெபத்திற்காகவும் ஓய்வுக்காகவும் இயேசு வழக்கமாகச் செல்லும் இடமாக இத்தோட்டம் இருந்தது, இம்முறை இத் தோட்டத்திற்குத் தாம் வருகை தருகின்ற கடைசித் தருணம் இதுதான் என்பதைத் தெரிந்துகொண்டே இயேசு தோட்டத்திற்கு வந்திருந்தார். இது இயேசு முகங்கொடுத்த முக்கிய சோதனையாகும். அன்று நடக்கப்போவது இன்னது என்பது இயேசுவுக்குத் தெரியும். ஆனால் அவரோ ஒளிக்கவில்லை. அற்புதமாய் தப்பித்துக் கொள்ளவும் முயலவில்லை. வழக்கம்போல, ஆனால் மனவேதனையுடன் அன்று தோட்டத்தில் நுழைந்தார் இயேசு.

2. தமது சீஷர்களில் கரிசனை காட்டினார்:

சீஷர்களை நோக்கி, தமக்காக அல்ல; அவர்களுக்காகவே, அவர்கள் சோதனைக்குட்படாத படிக்கே ஜெபிக்கும்படி அந்த நேரத்திலும் அவர்களைப் பணிந்தார். அவர்கள் சிதறி ஓடப்போவதும் காட்டிக்கொடுக்கப்போவதும் மறுதலிக்கப்போகிறதும் ஆண்டவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் அவர்களை ஒதுக்கவில்லை. அவர்கள் முகங்கொடுக்கப்போகிற சோதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள அவர்களுக்கு வழியைக் காட்டினார்.

3. ஒரு முழு மனிதனாக தன் உணர்வுகளை வெளிப்படையாகவே கொட்டினார்:

சீஷர்களை பிரித்து அப்பாலே நிறுத்திவிட்டு, இயேசு தாமே பிதாவோடு தனித்திருந்து ஜெபித்ததை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த நிலையில் பிதா ஒருவரைத் தவிர தம்மைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள் யாருமில்லை என்பது மனிதனாய் நின்ற இயேசுவுக்குத் தெரியும். மாத்திரமல்ல, அவர் தமது மனஉணர்வுகள் எதனையும் மறைத்து, போலியான ஜெபம் செய்யவில்லை. தம்முடைய சரீர உபாதைகள், அடையப் போகிற சிலுவை உபத்திரவம், மரணம், பாவமே இல்லாத அவர் சுமக்கப்போகிற உலகத்தின் மொத்தப் பாவம் ஆகிய இவை யாவற்றுக்கும் மேலாக, இயேசு அடைந்த வியாகுலம் இன்னும் மேலானது. தம்மீது பாவம் சுமத்தப்படுவதால் பிதாவின் முகம் மறைக்கப்பட்டுவிடும் என்பது அவருக்குத் தெரியும். இதுதான் இயேசு தோட்டத்தில் அனுபவித்த வியாகுலத்தின் உச்ச கட்டம்! ஒருகணமேனும் பிதாவைவிட்டுப் பிரியாத அவர் இந்தக் கணத்தை நினைந்து கலங்கினார். தரையிலே விழுந்து மும்முறை ஜெபித்தார்.

4.இயேசுவிலிருந்து சிந்தப்பட்ட முதல் இரத்தம்:

ஒலிவ விதையை செக்கிலே போட்டு அரைத்தால் என்ன வரும்? எள்ளு செக்கிலே நசுக்கப்பட்டால் என்ன வரும்? மனிதன் செக்கிலே நசுக்கப்பட்டால் என்ன வரும் விதைக்குள் சங்கமமாயிருக்கும் எண்ணெய் வெளிவருமானால், மனிதன் நசுக்கப்படும்போது அவனுக்குள் சங்கமமாயிருக்கும் இரத்தம்தானே வெளிவரும். தோட்டத்து அனுபவத்தை எழுதும்போது, “அவர் மிகவும் வியாகுலப்பட்டு அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்.22:44) என்று லூக்கா குறிப்பிட்டுள்ளார். இதனை வேதனை என்பதா? வியாகுலம் என்பதா? அதிலும் மேலே சொல்ல வார்த்தைதான் உண்டா?

5. தம்மை முழுமையாய் தேவசித்தத்திற்கு ஒப்புவித்து, தமது பணியை உறுதிப்படுத்திக் கொண்டார்:

ஒரு மனுஷனாய் “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் (பாவத்தைச் சுமந்து அதனால் ஏற்படப்போகிற மரணப் பாத்திரம்) பாத்திரம் என்னைவிட்டு நீங்கும் படி செய்யும்” என்று ஜெபித்தால், அவர் பின்வாங்கிவிட்டார். என்று அர்த்தமா? மரணத்தை எதிர்கொள்ளப் பயந்தார் என்ற அர்த்தமா? இல்லை. பாவத்தைத் தம்மேல் சுமந்து, ஒரு கணமேனும் பிதாவைவிட்டுப் பிரிய இந்தப் பிரிய குமாரனால் நினைத்தும் பார்க்கமுடியவில்லை என்பதுதான் உண்மை. “ஆயினும், என் சித்தப்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று ஒப்புக்கொடுத்துவிட்டார் ஆண்டவர். அதற்குப் பிதா அளித்த பதில் என்ன? கேட்டபடி அந்தப் பாத்திரத்தை அகற்றினாரா, இல்லை. ஞானஸ்நானம் எடுத்தபோதும், மறுரூபமலையிலும், வானத்திலிருந்து இவர் என் நேசகுமாரன் என்று முழங்கிய பிதா, இங்கே ஏதாவது பேசினாரா, இல்லை. பதிலுக்கு, தூதர்களை அனுப்பி தமது குமாரனைப் பலப்படுத்தினார் என்று வாசிக்கிறோம். இதுதான் பிதா கொடுத்த பதில். ‘நீ இந்தப் பாத்திரத்தைச் சுமக்கத்தான் வேண்டும். நான் உன்னைத் தேற்றுவேன்’ என்பதுபோல பதில் அமைந்தது. ஆக, இயேசுவானவர் தமது பணியை உறுதிசெய்து, அதை ஏற்றுக்கொண்டார்.

6. இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார்:

அவர் யாரால் காட்டிக்கொடுக்கப்பட்டார்?

ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளாக கூடவே இருந்த அன்பான சீஷனால்,

உனக்கு இப்படிப்பட்ட சோதனை வரும் என்று இயேசுவால் எச்சரிக்கப்பட்ட சீஷனால்,

கடைசி இராப்போஜனம் அன்று தோய்க்கப் பட்ட துணிக்கையை இயேசுவின் கைகளிலிருந்து வாங்கி உண்ட சீஷனால்,

சிநேகிதனே, என்று இயேசுவால் அழைக்கப் பட்ட சீஷனால்,

அதிலும் அவன் எப்படிக் காட்டிக்கொடுத்தான்? முத்தத்தால், இது என்ன கொடுமை!

7. கைதுசெய்யப்பட்ட நிலையிலும் மனித நேயத்தை வெளிப்படுத்தினார்:

வெட்டுவதற்கு ஒரு வேலைக்காரனின் காதுதானா கிடைத்தது? இந்தளவு வைராக்கியம் காட்டியவர்கள் பின்னர் சிதறி ஓடியது என்ன? இயேசுவோ அந்த வேலைக்காரனின் காதை, கைதியாக நின்ற அந்த நிலையிலும் குணமாக்கிவிட்டுத்தான் அவர்களோடே சென்றார். பன்னிரு சீஷர்கள் சூழ தோட்டத்திற்குள் நுழைந்தவர், இப்போது தனிமையாகப் பிடிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். இயேசுவைப்போல, அந்த சீஷர்களும் செக்கிலே பிழியப்பட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?


இயேசு சோதனையில் ஜெயித்தார்:

ஒரு மனுஷனாய் இயேசுவின் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கமடைந்திருந்தாலும், பிதாவானவர் அவரைத் தேற்றியபோது, அவர் மனப்பூர்வமாய் தம்மை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்ததே இந்தக் கெத்சமெனே அனுபவம். பிதாவின் வார்த்தையை மீறி கீழ்ப்படியாமற்போன ஆதாமினால் உண்டான பாவத்துக்குப் பரிகாரமாக, தமது முழுமையான கீழ்ப்படிதலைக்கொண்டு அந்தப் பாவத்தின் கூரை முறியடிக்கத் தம்மை அர்ப்பணித்த இடமும் இதுதான். எல்லா விதத்திலும் சோதிக்கப்பட்டும், பாவத்தை முற்றும் எதிர்த்து ஜெயம் பெற்றதும் இங்கேதான். அவருடைய பரிசுத்த இரத்தம் சிந்தப்படுவதற்கு முன், அது தானாகவே சிந்தியதும் இங்கேதான்.

மொத்தத்தில் இந்த கெத்சமெனேயில் இயேசு ஜெயித்ததால்தான், பிழியப்பட இடமளித்ததால்தான், பிதாவின் சித்தத்திற்குத் தம்மை முழுமையாக ஒப்புவித்ததால்தான் அவர் சிலுவையைச் சுமந்துகொண்டு கல்வாரிக்கு வெற்றி வேந்தனாகச் செல்ல முடிந்தது. இங்கே தோற்றிருந்தால் சிலுவையைச் சுமந்திருக்க முடியாது. சிலுவையைச் சுமந்திராவிட்டால் உயிர்த்தெழுந்திருக்கவும் முடியாது. இயேசு உயிர்த்தெழுந்திராவிட்டால் மனுக்குலத்திற்கு எந்தவொரு நம்பிக்கையும் கிடைத்திராது. ஆக, இயேசு கெத்சமெனேயிலே ஒரு தனி மனிதனாக நின்று ஜெயம் பெற்றார்.


இன்று நமது காரியம் என்ன?

இயேசு சுமந்ததால் நாம் சுமக்கத் தேவையில்லை என்று இன்று அநேகர் சொல்லுவார்கள். ஆம், அவர் நமது பாவத்தைச் சுமந்ததால் நாம் சுமக்கத் தேவையில்லை என்பது உண்மைதான். அதற்காக நாம் சிலுவையையே சுமக்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. நமது சிலுவையை நாம் சுமக்கவில்லையானால் நாம் இயேசுவின் சீஷராக இருக்கமுடியாது. அதேசமயம் நமது சிலுவையை நாம் சுமக்கவேண்டுமானால், முதலாவது, அந்த கெத்சமெனே அனுபவம் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம்.

“ஒருவன் என்னைப் பின்பற்றி வரவிரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து….” இதுதான் தம்மைப் பின்பற்றுகிறவனுக்கு இயேசு கற்றுக்கொடுத்த முதற்படி. ஒரு வெற்றியை அடையவேண்டுமென்றால் அதற்காக விலைகிரயம் செலுத்தித்தான் ஆகவேண்டும். எந்தப் பாடுகளும் இல்லாமல் நிஜமான வெற்றியை நாம் பெற்றுவிடமுடியாது.

இயேசு தம்மையே விலைக்கிரயமாகக் கொடுத்து அந்த வெற்றியைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார். இந்த ஆண்டவருக்காக நாம் இன்று எதைக் கொடுக்கப் போகிறோம்?

அன்பானவர்களால் கைவிடப்பட்டாலும், காட்டிக் கொடுக்கப்பட்டாலும், அதிலும் முத்தத்தைப்போல அன்பின் செய்கைகளை வஞ்சகமாகச் செய்து நம்மைத் துன்பத்தில் வீழ்த்தினாலும், தப்பிக்க இனி எந்தவொரு வழியும் இல்லை என்றாலும், மரணம்தான் முடிவு என்றாலும், மருத்துவர்களால் கைவிடப்பட்டாலும்… இப்படியாக எந்த நிலை என்றாலும், “பிதாவே என் வாழ்வில் உமது நாமம் மகிமைப்படுமானால் நான் எந்த விதத்திலும் பிழியப்பட, எந்தப் பாடுகளையும் சந்திக்கத் தயாராய் என்னைத் தருகிறேன்” என்று நம்மால் நம்மை அர்ப்பணிக்க முடியுமா? தேவனை விட்டு நம்மைப் பிரித்துப்போடத்தக்கதான எந்த சோதனையிலும், ‘பிதாவே, நீர் என்னுடன் இருக்கிறீர் என்ற உறுதி இருப்பதற்காக ஸ்தோத்திரம்’ என்று நம்மால் சொல்ல முடியுமா?

அன்று இயேசு பிழியப்பட்டபோது அவருடைய பரிசுத்த இரத்தம் பெருந்துளிகளாக நிலத்தில் விழுந்து அந்தத் தோட்டத்திற்கே ஒரு பெறுமதியைக் கொடுத்தது. இன்று நாம் பிழியப்பட்டால் நம்மில் என்ன வடியும்? நமக்குள் மறைந்திருக்கும் பாவகுணங்களும், வெளிக்காட்டாத போலித்தனங்களும், கபடமும், வஞ்சகமும், தற்பெருமையும்…. என்னவெல்லாம் வெளிவரும். ஆனால், நாம் செக்கிலே போடப்பட்டுப் பிழியப்படாவிட்டால் சிலுவை சுமக்கும் உன்னத அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. சிலுவை சுமக்காத எவனும் ஆண்டவரின் உயிர்த்தெழுதலின் அனுபவத்துள் பிரவேசிக்க முடியாது. உயிர்த்தெழுந்து, கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்வு வாழாமல் நித்திய ராஜ்யத்துள் பிரவேசிப்பது எப்படி? பவுலடியார், ரோமாபுரிச் சிறைக்கூடத்திலே சரீர மரணத்தைச் சந்திக்கும் முன்னர் அவர் எத்தனை தடவைகள், எத்தனை விதங்களிலே பிழியப்பட்டார் என்பதை அவரே தமது நிருபங்களில் எழுதிவைத்திருக்கிறதை நாம் வாசிக்கலாம். அதிலும், மாம்சத்தின்படி தன் இனத்தாராகிய தன் சகோதரருக்குப் பதிலாக தானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவதாகவும் எழுதியுள்ளார்.

இந்தப் பெரிய அர்ப்பணம் நம்மிடம் இல்லாவிட்டால், நமது சுயத்தை வெறுக்கின்ற அந்த கெத்சமெனே அனுபவத்தின் ஒரு பெருந்துளியாவது நம்மிடம் காணப்படுகிறதா என்பதைச் சிந்திப்போம். இன்று கிறிஸ்தவ வாழ்வு என்பது சிலுவை வழியைவிட்டு, கெத்சமெனே அனுபவத்தைவிட்டு, ஆசை இச்சை மோகம் பதவி அந்தஸ்து பணம் செல்வாக்கு சுயபுகழ் அடுத்தவனை விழுத்தியாவது தன்னை மேன்மைப்படுத்துவது, தன் சுயத்துக்காக கொலைகூட செய்யத் தயங்காத நிலை என்று வேறொரு பாதைக்குத் திரும்பி விட்டது. அதாவது, சாத்தானின் வஞ்சக சோதனைக்கு இன்று கிறிஸ்தவ வாழ்வு ஆளாகி விட்டது. கெத்சமெனே அனுபவம் இல்லாமலே மோட்சம் நான் காட்டுவேன் என்ற பிசாசின் வஞ்சகத்தை அறியாமல் கிறிஸ்தவ வாழ்வு ஆட்டம் கண்டுவிட்டது.

இன்றும் மக்கள் கெத்சமெனே ஜெப அனுபவத்திற்கென்று போகிறார்கள். ஆனால் எதற்காக? விழித்திருக்கவா அல்லது தூங்கி விழிக்கவா? தம்மை ஒப்புவிக்கவா அல்லது பிதாவை தமது வழிக்கு இணங்க வைக்கவா? பிழியப்படவா அல்லது அடுத்தவனைப் பிழியவா? வேதனையிலிருப்போனைத் தேற்றவா அல்லது காட்டிக் கொடுக்கவா? எந்த இக்கட்டிலும் ஆண்டவருக்காக வைராக்கியமாய் நிமிர்ந்து நிற்கவா அல்லது கோழைகளைப் போல பின்வாங்கி ஓடிப்போகவா?

பிரியமானவர்களே, நமது அன்றாட கடமை ஜெபங்கள் நமக்குக் கெத்சமெனேயின் அனுபவத்தைத் தராது. நாம் தேவபாதத்தில் தரித்திருந்து ஜெபிக்கவும், அவரோடு தனித்திருக்கவும், பிதா எது சொன்னாலும் செய்தாலும் ஏற்றுக்கொள்ளுகின்ற அர்ப்பணமுள்ள மனதுடனும் நாம் தேவபாதம் விழுந்து பணிய வேண்டும். அங்கேயே உயிர்த்தெழுதலின் சாயல் ஆரம்பமாகிவிடுகிறதே!

நாம் கெத்சமெனேக்குத் திரும்புவோமா? நமது திராணிக்கு மேலாக நாம் பிழியப்பட ஒருபோதும் கர்த்தர் இடமளிக்கமாட்டார். அதேசமயம் நாம் எவ்விதத்தில் புடமிடப்பட வேண்டுமோ அந்த முன்னெடுப்பில் நாம் சோர்ந்துபோகாதிருக்க தமது தூதர்களை அல்ல, இன்று தாமே நம்மைத் தேற்றுகிறவராக இருக்கிறார். ஏனெனில், “…எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” (எபி.4:15). வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற பிழியப்படுகிற எந்த சந்தர்ப்பத்திலும் நாம் இன்று கலங்கத் தேவையில்லை. ஆண்டவர் நமக்கு உலகம் தரக் கூடாத சமாதானத்தைத் தந்திருக்கிறாரே.

“…அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்” (கலா.4:6). இது எவ்வளவு பெரிய பாக்கியம்!

இந்த ஒன்றினிமித்தமாவது நாம் நம்மைத் தேவசித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கலாமே. கெத்சமெனேயின் அனுபவமின்றி சிலுவையுமில்லை; உயிர்த்தெழுதலும் இல்லை.