என்னை ஆராய்ந்து பாரும் கர்த்தாவே!


சகோதரி சாந்தி பொன்னு

நமது ஆண்டவரும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவின் ஒப்பற்ற நாமத்தில், அனைவருக்கும் என் அன்பின் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய ஆண்டு வந்ததும், இவ் வருடத்திற்குரிய வாக்குத்தத்தம் என்ன என்று தேடுகிறவர்கள் அநேகர். பரிசுத்த வேதம் முழுவதையுமே கர்த்தர், வாக்குத்தத்தமாகவே கொடுத்திருக்கிறார். பின்னர் ஏன் இந்தத் தேடுகை?

“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ் சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்” (1கொரி. 1:8).



இத்தனையாய் நம்மை நேசிக்கும் தேவன் நமக்கிருக்கும்போது தேவையற்ற தேடுகைகள் நமக்கு எந்தவொரு விசேஷித்த நன்மைகளையும் தரப்போவதில்லை. இந்த வசனத்தில் ‘முடிவுபரியந்தம்’ என்ற சொல்லைக் கவனித்தீர்களா? ஆம், நமது வாழ்வு இந்த மண்ணில் முடியுமட்டும், தமது இரண்டாம் வருகைமட்டும் அவர் நம்மை நிலைநிறுத்தப் போதுமானவராயிருக்கிறார். இதைவிட நமக்கு வேறென்ன வேண்டும்? இந்த ஒன்றுக்காகவே நாம் வாழ்நாள் முழுவதுமே தேவனை ஸ்தோத்திரிக்கலாமே.

வேதாகமத்தில் எழுதி வைத்திருக்கிறபடியே கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான சகல அடையாளங்களும் இந்நாட்களில் அதிகமதிகமாக வெகுவேகமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பாவமும் அக்கிரமமும் உக்கிரமடைந்துகொண்டிருக்கிறது. விபசார ஆவி கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறதோ என்று எண்ணத்தக்கதாக அசிங்கங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. கிறிஸ்துவினிமித்தம் உபத்திரவப்படத் தயாராகவேண்டிய திருச்சபைகளும், கிறிஸ்தவ ஸ்தாபனங்களும் தமக்குள்ளே பிளவுகளையும் பிணக்குகளையும் தாராளமாகவே விதைத்து வருகின்றன. பிசாசானவன் தேவ சபைகளில் உட்கார்ந்திருக்கிறானோ என்று எண்ணுமளவுக்குக் காரியங்கள் கேள்விக்குறியாகி வருகின்றன.

அதேசமயம் தேவனுடைய வார்த்தையும் அதிதீவிரமாக விதைக்கப்பட்டு வருகின்றது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. உண்மையுள்ள தேவஊழியர்கள் பலர் எழுந்து தேவனுடைய பண்ணையில் மறைமுகமாக, ஆனால், வெகு ஊக்கமாக வேலை செய்கிறார்கள். பல சவால்கள் மத்தியில், எவ்வித பேர் புகழையோ பணத்தையோ எதிர்பார்க்காமல் தம்மை ஊற்றி தேவபணியைச் செய்யும் அவர்களுக்காக தேவனை ஸ்தோத்திரிப்போம்.

இப்படியிருக்க, தேவனுடைய சுத்த கிருபையினால் ஒரு புதிய ஆண்டுக்குள் பிரவேசித்திருக்கும் நமது காரியம் என்ன? நமது வாழ்வுக்குத் தேவையான சகலத்தையும் கர்த்தர் செய்துமுடித்துவிட்டார். அவற்றை நாம் அறிந்துகொள்ளவும், விசுவாசிக்கவும்தக்கதாக எழுதியும் வைத்துவிட்டார். அப்படியிருக்க, நாம் செய்துகொண்டிருக்கும் காரியம் என்ன? கடந்த ஆண்டுகளில் தேவன் செய்த நன்மைகளுக்கு நன்றி சொல்லுகிறோமா? மிக நல்லது. நன்றி சொல்வதுடன் நிறுத்திவிடாமல் அந்த நன்றியுடன் வாழுகிறோமா என்பதிலும் நாம் விழிப்பாயிருப்பது அவசியம்.

இந்த ஆண்டு சிறப்பாய் அமைய இன்னுமொரு முக்கிய காரியத்தையும் நாம் செய்ய வேண்டியது மிக மிக அவசியம். அறிவு பெருத்துவருகின்ற இக் காலப்பகுதியில், நாளுக்கு நாள் ஆச்சரியமான படைப்புகள் வெளி வருகின்ற இந்நாட்களில் நம்மை ஆளுகை செய்வது எது என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்பது நல்லது. சென்ற ஆண்டைப் பார்க்கிலும், இந்த ஆண்டிலே இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகள், நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதற்குத் தயாராயிருக்கின்றன. நம்மையும் அறியாமல், விசேஷமாக நமது பிள்ளைகள் வாழ்விலே இந்த அறிவு அவர்களையும் அறியாமலே அவர்களை ஆட் கொண்டுவருகிறது என்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். கேட்டால் கிறிஸ்தவ வேலைகள்தான் செய்கிறோம் என்பார்கள். உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், தேவபாதத்தில் எத்தனை மணிநேரம் தனித்திருந்து தேவனோடு அவர்களும் நாமும் உறவாடுகிறோம் என்பதை ஆராய்ந்து பார்த்து மனந்திரும்ப வேண்டியது மிக அவசியம். “நம்மையும் அறியாமலே” என்ற விஷயத்தில் நமக்கு விழிப்புணர்வு மிக அவசியம்.

ஆகவே, தாவீதின் ஜெபம் நமது ஜெபமாக மாறும்படி நம்மைத் தாழ்த்துவோமா!

“தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்து கொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” (சங்.139:23,24).


என்னை ஆராயும்

“ஆராய்ந்து பாரும் கர்த்தாவே” என்று ஒரு அருமையான ஞானப்பாட்டு உண்டு. முக்கியமாக திருவிருந்து ஆராதனையில் இதனை நாம் பாடுவோம். ஆனால், உண்மையாகவே “என்னை ஆராய்ந்து பாரும்” என்று நம்மை ஒப்புக்கொடுத்திருக்கிறோமா என்பதை தேவன் இந்த நாட்களிலே நமக்கு உணர்த்துவாராக. இது ஒரு கடினமான ஜெபம். தாவீது தெளிவாக “என்னை” ஆராயும் என்று ஜெபிப்பதைக் காண்கிறோம். பிறரைத் தேவன் ஆராயும்போது நமக்கு இருக்கும் கிளுகிளுப்பு, நம்மை தேவன் ஆராயும்போது ஏற்பட வாய்ப்புண்டா என்பது கேள்விக்குறிதான்.

‘என்னை’ என சொல்லும்போது என்னுடைய முழுமையும் அடங்குகிறது. இவ்வுலக வாழ்வில் என் வாழ்வுமுறை, என் ஆவிக்குரிய ஜீவியத்தில் தேவனுக்கும் எனக்குமுள்ள உறவுமுறை, என் உடை, நடை, பழக்க வழக்கங்கள், நட்புகள், செய்யும் தொழில் என்று இதனை அடுக்கிக்கொண்டே போகலாம். நான், எனக்கு, என்னுடையது என்று வாழுகிறேனா? அல்லது, என்னை நானே வெறுத்து என் சிலுவையை எடுத்துக்கொண்டு என் ஆண்டவர் நடந்த வழி நடக்கிறேனா? தேவனே, என்னை ஆராயும் என்று நம்மை ஒப்புவிப்போம்.


என் இருதயத்தை ஆராயும்!

என்னை ஆராயும் என்று தாவீது ஜெபித்த போதே அதிலே ஒரு மனிதனுடைய முழுமையும் அடங்குகிறது. ஆனால், தாவீது குறிப்பாக தன் இருதயத்தை ஆராய்ந்து அறியும்படி ஜெபிக்கிறார். “மனுஷனுடைய …இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே…” என்று ஆதி.6:5இல் கண்ட கர்த்தர், இன்றும் அதாவது தமது ஒரே பேறான குமாரனையே ஏகபலியாக ஈந்த பின்னும், அதே பொல்லாத்தனத்தையே காண்கிறார் என்பது எவ்வளவு துக்கத்துக்குரிய விஷயம்! நமது வெளிவாழ்விலே நம்மை உத்தமர்களாகக் காட்டிக்கொள்ள எவ்வளவுதான் பிரயத்தனம் எடுத்தாலும், நமது இருதயத்தின் உண்மை நிலை தேவனுக்கு மாத்திரமே தெரியும். “…நானே …இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்” (எரே.17:10) என்கிறார் கர்த்தர். “இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்” (1கொரி.4:5).

நமது நற்செயல்கள் பலரைக் கவரக் கூடியதாக இருக்கலாம்; நமது பேச்சு நாம் காட்டும் அன்பு பலருக்கு ஆறுதல் தருகிறதாகவும் இருக்கலாம். நாம் செய்யும் பிரசங்கங்கள் ஊழியங்கள் பலருக்கு உதவியாகவும் ஆச்சரியம் தருகிறதாகவும் இருக்கலாம். பல தரிசனங்களைக் காணலாம்; பல அற்புதங்களைக்கூட நாம் செய்யலாம். ஆனால், அவற்றின் பின்னால் மறைந்திருக்கிற நோக்கங்கள், எண்ணங்கள், இருதயத்தின் அழுத்தங்கள் இவற்றை யார் அறிவார்? அவற்றை அறியக்கூடியவர் அதனை வெளிப்படுத்தும் முன்னதாகவே நாம் மனந்திரும்புவது நல்லது. தாவீது ராஜாகூட தான் செய்தது இன்னது என்று தெளிவாகத் தெரிந்தும், ஒரு விதவைக்கு வாழ்வுகொடுத்த உத்தம ராஜா என்ற மாயையான போர்வைக்குள் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக தன்னை மறைத்து வைத்திருந்தார். அந்தக் கொடிய பாவம் உணர்த்தப்பட்டபோது, ‘சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்’ என்று ஜெபித்ததை வாசிக்கிறோம்.

நாமும் நமது இருதயத்தை இன்றே ஒப்புவிப்போமா!


என் சிந்தனையை ஆராயும்!

முன்கூட்டியே பரிசோதனைகள் செய்து ஒரு தீர்மானத்துக்கு வந்தபின்னர்தான் அநேகமான அறுவைசிகிச்சைகள் முன்னெடுக்கப்படுவதுண்டு. ஆனால், அறுவைசிகிச்சை செய்து நோயாளியின் நிலைமையைத் தீர்மானிக்கின்ற சந்தர்ப்பங்களும் நிறையவே உண்டு. தாவீதின் ஜெபமும் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்ததுதான். தன்னை ஆராய்ந்து, தன் இருதயத்தை ஆராய்ந்து ஆராய்ந்தாலும் அது தாவீதுக்குத் திருப்தியில்லை. எந்த மனுஷனும் எந்தவிதத்திலும் கண்டுகொள்ள முடியாத தன் நினைவுகளையும் ஆராயும்படி ஒப்புக்கொடுக்கும் தாவீது, தனக்குள் ஒளிந்திருக்கும் பாவங்களையும் கண்டுபிடித்துக் கூறும்படி ஜெபிக்கிறார். பரிசுத்த தேவன்தாமே நமது பாவங்களை நமக்கு வெளிப்படுத்தாவிட்டால் யார் அவற்றை நமக்குச் சுட்டிக் காட்டமுடியும்?

நமது உயிர் உள்ளவரைக்கும் நமது நினைவுகளும் சிந்தனைகளும் ஓய்வதில்லை. நமது மனம் எதையோ எந்நேரமும் நினைத்துக் கொண்டுதான் இருக்கும். ஆனால், நினைவுகளில் அலைமோதுகின்ற எண்ண அலைகள், அதைத் தொடர்ந்துவரும் தோற்றங்கள் நமது வாழ்வை எவ்வளவாகப் பாதிக்கின்றன என்பதை நாம் அவ்வளவாகக் கருத்தில் கொள்ளுவதில்லை. ஆனால் தாவீது அதனை அனுபவித்திருக்கிறார்.

எந்தக் காரியம் நமது சிந்தனையை ஆட் கொள்ளும்படி அதிகமாக நாம் இடமளிக்கிறோமோ, அதுவே நம்மை ஆளுகை செய்ய ஆரம்பித்துவிடுகிறது. பின்னர் அதுவே செயற்பாடாக வெளிப்படுகிறது. அது தொடரும்போது அதுவே வாழ்க்கை முறையாகிவிடுகிறது. ‘ஆண்டவரே, அடியேன் உம்மையே நினைத்திருக்கும் நினைவை என் எண்ணத்திலே வையும். உமது நினைவை என் நினைவிலே இருத்தியருளும்’ என்று நம்மை ஒப்புவிக்கமுடியுமா! இல்லையானால் அந்த சிந்தனைகள் செயற்பாடாக மாறுமிடத்து, அதன் விளைவுகள் மகா பயங்கரமாயிருக்கும்.


என் வழிகளை ஆராயும்!

நமக்கு முன்னே ஜீவவழியும் மரணவழியும் இருப்பதை பரிசுத்த வேதாகமம் நமக்கு உறுதிப்படுத்தியுள்ளது. இதிலே நாம் எவ்வழி நடக்கிறோம். எந்தவொரு மனுஷனும் தான் போகும் வழியில் தவறு இருப்பின் அதை ஏற்றுக்கொள்வது மிக மிக அரிது. அவனவனுக்குத் தான் சரி என்ற எண்ணம். அதனால்தான் வாதங்களும் வழக்குகளும் உண்டாகின்றன.

தனக்குரிய யாவையும் இழந்து தவித்து நின்றபோதும், நீ பாவம் செய்தாய், அவற்றை அறிக்கையிட்டுவிடு என்று நண்பர்கள் குத்திக் காட்டியபோதும், “…நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” (யோபு 23:10) என்று யோபு எவ்வளவு உறுதியாகச் சொன்னார். இன்று நம்மால் அப்படிச் சொல்லமுடியுமா?

நானே வழி என்று சொன்ன ஆண்டவரைச் சேவிக்கின்ற நாம் இன்று சென்று கொண்டிருக்கும் வழி எது? தேவனுடைய வார்த்தை காட்டுகின்ற வழியில் நாம் நிற்கிறோமா? அல்லது அப்படியே சொல்லிக்கொண்டு நமது சுயவழி நடக்கிறோமா! நாம் வித்தியாசமானவர்களாக, வேறுபட்ட குணமுள்ளவர்களாக, வேறுபட்ட திறமையுள்ளவர்களாக இருக்கலாம். ஆனால், நாம் செல்லவேண்டிய ஒரே வழி இயேசுகிறிஸ்து நடந்த வழிதான். அதை விட்டுவிட்டு, நியாயம் நீதி என்று சொல்லிக்கொண்டு, நமது சொந்த வழிகளில் நடப்போமானால் அது படுகுழிக்குள்தான் நம்மைக் கொண்டுசேர்க்கும்.

ஆண்டவர் இந்த நாளிலே நமது வழிகளைக் குறித்து நமக்கு உணர்த்துவாரானால் அதை அறிக்கைசெய்து விட்டுவிட்டு, அவர் நமது கரத்தைப் பிடித்து வழிநடத்த நம்மை ஒப்புவிப்போமா!


நீர் என்னை நடத்தும்!

என்னை, என் இருதயத்தை, என் சிந்தனைகளை, என் வழிகளைச் சோதித்தால் மாத்திரம் போதாது. தேவன் அதை உணர்த்தினால் மாத்திரம் போதாது. தவறுகளைச் சரிசெய்துவிட்டால் மாத்திரம் போதாது. எழுந்து, பரிசுத்த பாதையில், அந்த நித்திய வழியில் நாம் நடக்கவேண்டும்.

அன்று எகிப்திலிருந்த இஸ்ரவேலை மீட்ட தேவன் வனாந்தரத்தில் கொண்டுவந்து விட்டு விட்டு, கானான் போய்ச் சேருங்கள் என்று சொல்லி தம் வழியே போனாரா? கூடவே இருந்து வழிநடத்தினாரல்லவா! எவனுடைய வாழ்வு தேவனால் நடத்தப்படவில்லையோ அந்த வாழ்வு ஒருபோதும் தேவனண்டைக்குப் போய்ச்சேராது.

“உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத் திலிருந்து கொண்டுபோகாதிரும்” (யாத்.33:15) என்று மோசே ஜெபித்ததுபோல நம்மாலும் ஜெபிக்கமுடியுமா?

கடந்த ஆண்டைப் பார்க்கிலும் இந்தப் புதிய ஆண்டிலே, இன்னும் இன்னும் தேவனை அண்டிச் சேரும்படி நம்மை ஒப்புவிப்போமாக. போலியற்ற வாழ்வு, சுத்த இருதயம், ஆரோக்கியமான சிந்தனைகள், வார்த்தை காட்டும் வழி இவற்றை நாடுவோமாக. அப்போது பரிசுத்தாவியானவர் நம்மை நித்திய வழியிலே தாமே முன்னின்று நடத்துவார். வழியில் என்ன சோதனை வேதனை வந்தாலும் நாம் தடு மாறவேண்டியதில்லை. உலக மாயைக்குள் அகப்படாமல் என்னதான் நேர்ந்தாலும் கிறிஸ்துவுக்காய் பாடனுபவிக்கவும், தேவனைச் சந்திக்க தயார்நிலையில் நிற்கவும், கிறிஸ்தவ சாட்சியைக் காத்துக்கொள்ளவும் தேவன்தாமே நம் அனைவரையும் ஆசீர்வதித்து நடத்துவாராக. குற்ற மனச்சாட்சியற்ற தூய வாழ்வு வாழ பரிசுத்தாவியானவர் நம்மைத் தாங்குவாராக. ஆமென்.